விஷால் அணியுடன் சரத்குமார் சமரசம்?:பதவிகளை விட்டுக்கொடுக்க முடிவு

தினமலர் செய்தி : நடிகர் சங்கத் தேர்தலில், போட்டியை தவிர்க்கும் முடிவுக்கு, சங்கத் தலைவர் சரத்குமார் வந்திருப்பதாக, அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில், தனியாருக்கு கட்டடம் கட்ட அனுமதி அளித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இதை, நடிகர் விஷால் தலைமையில், நடிகர் சங்கத்தைச் சேர்ந்த பலரும் எதிர்த்து வருகின்றனர்.


இதன் உச்சகட்டமாக, அடுத்த மாதம் நடக்க இருக்கும், நடிகர் சங்கத் தேர்தலில், சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலர் ராதாரவியை எதிர்த்து, விஷால் தலைமையில், ஒரு அணி போட்டியிடத் தயாரானது.

துவக்கத்தில், ராதாரவி தரப்பினருக்கு ஆதரவாக இருப்பதாக, உறுதி அளித்திருந்த, நாடக நடிகர்கள் பெரும்பான்மையானோர், விஷால் அணியினரைக் கண்டதும், அவர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி விட்டனர்.இதனால், விஷால் அணியினருக்கு ஆதரவு அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஷால் அணியினருடன் சமாதானமாகி, தேர்தலை தவிர்க்கலாம் என்ற முடிவுக்கு, நடிகர் சரத்குமார் வந்திருப்பதாக தெரிகிறது. இதற்காக, நிர்வாக பதவிகளை, இரு தரப்பும் பகிர்ந்து கொள்ளலாம் என, விஷால் அணியினருக்கு துாது அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, 'கோலிவுட்' வட்டாரங்கள் கூறியதாவது:மதுரை சென்ற விஷால் அணியினர், நாடக நடிகர்களை சந்தித்துப் பேசி, 'நாடக நடிகர்களுக்காக, மதுரையில் கட்டடம் கட்டிக் கொடுக்கிறோம்' என, வாக்குறுதி கொடுக்க, நாடக நடிகர்கள், விஷால் அணிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். முன்னணி நடிகர்கள் பலரும் விஷால் அணிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், நாடக நடிகர்களில் ஒரு பகுதியினர் ஆதரவளித்தால் கூட, தங்களுக்கு தோல்வி ஏற்படலாம் என்ற அச்சம், சரத்குமாருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால், 'இரு தரப்பும் சமாதானமாக போய்விடலாம்; அமர்ந்து பேசி, பதவிகளை பிரித்துக் கொள்ளலாம்; தேர்தலை தவிர்த்து விடலாம்' என, சரத்குமார் தரப்பில் துாது போக துவங்கி உள்ளனர்.இந்த துாது படலத்தில், மதுரை ஆதீனத்தின் பங்கு பிரதானமாக இருக்கும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மதுரை ஆதீனத்திடம் கேட்டபோது, ''துவக்கத்தில் இருந்தே, இதைத் தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; இரு தரப்பும் அமர்ந்து பேசினால், சுமுகமாக தீர்வு எட்டப்பட்டு விடும். கட்டாயம் தேர்தல் தவிர்க்கப்பட்டு விடும். இரு தரப்பும் விரும்பும் பட்சத்தில், சன்னிதானமே, அந்த சுமுகத்தை ஏற்படுத்துவேன்,'' என்றார்.

'விஜயகாந்த் போலவிலக வேண்டும்':திருச்சியில், விஷால் அளித்த பேட்டி: நடிகர் சங்கத்தில், ஒன்பது ஆண்டுகளாக, அரசியல் புகுந்து விட்டது என, ராதாரவியோ, சரத்குமாரோ சொல்லக் கூடாது. அவர்கள், இருவரும் தான் அரசியல் கட்சியில் உள்ளனர்.

நடிகர் விஜயகாந்த், அரசியல் கட்சி துவக்கியதும், நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகினார். அதேபோல சரத்குமார், ராதாரவியும் விலக வேண்டும். நடிகர் சங்கத்தில் இருந்து, நாடக நடிகர்களை நீக்க வேண்டும் என்ற, பேச்சுக்கே இடமில்லை. அவர்கள், நடிகர் சங்கத்தின் ஒரு அங்கம். மூத்த நாடக நடிகர்களின் ஆதரவு, எங்களுக்குத் தான் உள்ளது. நடிகர் சங்க தேர்தலில், துணைத் தலைவர் பதவியும், செயற்குழு உறுப்பினர் பதவிகளும், நாடக நடிகர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Comments