இந்த தேர்தலில் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க அதிமுக அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஆர்.கே.நகரில்
முகாமிட்டு வாக்கு சேகரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
காசிமேடு எஸ்.என். செட்டி தெருவில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
அணிவித்து தனது பிரச்சாரத்தை துவங்கும் ஜெயலலிதா, வீரராகவன் சாலை,
திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் சாலை சந்திப்பு, அருணாசலேஸ்வரர் கோவில்
தெரு, வைத்தியநாதன் சாலை, எண்ணுார் நெடுஞ்சாலை சந்திப்பு, எழில் நகர் -
மணலி சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனத்தில் இருந்து கொண்டே பிரச்சாரம் செய்ய
உள்ளார்.
பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா வருவதையடுத்து ஆர்.கே. நகரில் போலீஸ்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள பள்ளிகள் மதியத்தோடு மூடப்பட்டுள்ளன. ஜெயலலிதா
பிரச்சாரம் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் உள்ள பள்ளி நிர்வாகங்கள்
இவ்வாறு முன்கூட்டியே பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் அதை
விடுமுறை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மாறாக, உங்களது குழந்தைகளை உடனடியாக வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று
பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. திடீர் என
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெற்றோர் மத்தியில் பதற்றமும்,
குழப்பமும் ஏற்பட்டது.
அலுவலகம் சென்ற பெற்றோர்கள் பலர் விடுப்பும், பெர்மிஷனும் எடுத்துக் கொண்டு
தங்கள் பிள்ளைகளை அழைத்து வர பள்ளிகளுக்கு விரைந்தனர். ஏற்கனவே
அதிமுகவினரின் அட்டகாச முற்றுகையால் தொகுதியே களேபரமாக காணப்படுகிறது. இந்த
நிலையில் பள்ளி நிர்வாகங்கள் வேறு இப்படி உத்தரவிட்டால் பெற்றோர்களும்,
மாணவ, மாணவியரும் பெரும் துயரத்தில் மூழ்கினர்.
Comments