சுதாகரன் திருமண செலவை நீதிபதி குமாரசாமி எப்படி கணக்கிட்டார்? அப்பீல் மனுவில் கிடுக்கிப்பிடி

OneIndia News : பெங்களூர்: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணச் செலவு ரூ.28 லட்சம்தான் என்று எந்த அடிப்படையில் ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி முடிவெடுத்தார் என்று கர்நாடகா தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில் சுட்டிக் கேட்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், சுதாகரன் திருமணச் செலவை, ஹைகோர்ட் எந்த அளவுக்கு எளிதாக எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆடம்பர திருமணம் மனுவிலுள்ள இதுகுறித்த அம்சம்: ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்ட காலத்தில் அவரது வளர்ப்பு மகனுக்கு நடத்தப்பட்ட வெகு விமரிசையான ஆடம்பர திருமணம்தான் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அந்த திருமணத்திற்கான செலவை மிகவும் இலகுவாக கையாண்டுள்ளது ஹைகோர்ட்.

சிறப்பு நீதிமன்றம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், சுதாகரன் திருமணச் செலவாக ஜெயலலிதா வீட்டார் ரூ.6 கோடி செலவிட்டதாக அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், சிறப்பு நீதிமன்றமோ, ஆவணங்களை பரிசீலித்துவிட்டு, அரசு தரப்பு மிக அதிகமாக செலவு கணக்கு காண்பிக்கிறது. உண்மையில், ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று கூறி தீர்ப்பளித்தது.

நீதிபதி குறைத்தார் ஹைகோர்ட்டில் சுதாகரன் திருமணச் செலவு குறித்த மேல்முறையீட்டு, விசாரணையின்போது, ஜெயலலிதா தரப்பு, தாங்கள் ரூ.29 லட்சம் மட்டுமே செலவிட்டதாக கூறினர். ஆனால், ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமியோ, அதுகூட இல்லை, ரூ.28 லட்சம்தான் செலவிட்டுள்ளார்கள் என்று கூறி தீர்ப்பு எழுதியுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்களே ஒப்புக்கொண்டதை விடவும் குறைவாக நீதிபதி கணக்கீடு செய்ய காரணம் என்ன? என்ன ஆதாரத்தில் அவ்வாறு நீதிபதி கூறினார்?
 
ஆதாரம் என்ன? இந்து பாரம்பரியத் திருமணங்களில், திருமணச் செலவுகளை பெண் வீட்டார் ஏற்பது மரபு என்றும், எனவே, ஜெயலலிதா, மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்பதால், செலவு செய்திருக்க மாட்டார் என்றும் நீதிபதி ஒரு முடிவுக்கு வந்து கூறியுள்ளார். சம்பவம் நடக்கும்போது, ஜெயலலிதா முதல்வர் என்பதாலேயே, திருமணச் செலவுகளை அவரே செய்திருப்பார் என்பதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார். அரசு தரப்பு ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு, நீதிபதியே இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன முகாந்திரம் உள்ளது?

தப்புகள், தவறுகள் சுதாகரன் திருமணச் செலவை கணக்கிடுவதில் ஹைகோர்ட் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளது. மேலும், கணக்கு கூட்டல்களிலும் தவறுகள் உள்ளன. இதையெல்லாம் கணக்கில் எடுத்து, ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அரசு தரப்பு, சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் இடம்பெற்றுள்ளது.

Comments