ஜூலை முதல் வாரம் விசாரணை - அதிர்ச்சியில் "அம்மா"

Dinamalar Banner Tamil Newsதினமலர் செய்தி : புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை குறித்து தலைமை பதிவாளர் தேதியை அறிவிப்பார்.

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறப்பு கோர்ட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனையடுத்து முதல்வர் ஜெ., பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி மே மாதம் 11 ம் தேதி ஜெ., உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அ.தி.மு.க, சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் ஜெ., தற்போது அவர் சென்னை ஆர்.கே., நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டுமென்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட தமிழக எதிர்க்கட்சியினர் பலமுறை வலியுறுத்தினர். இது தொடர்பாக, கர்நாடகா சட்டத்துறை மற்றும் அட்வகேட் ஜெனரலுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா, கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திரா குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து அட்வகேட் ஜெனரல் பரிந்துரையின்படி ஜெ., வழக்கில் அப்பீல் செய்ய கர்நாடக அமைச்சரவை முடிவு செய்தது. இதன்படி இன்று கர்நாடாக அரசு தரப்பு வக்கீல்கள் குழு டில்லி வந்தது. அப்பீல் ஆவணங்களை தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த அப்பீல் மனு பதிவு செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு 4 ஆயிரம் பக்கங்கள் கொண்டது. இந்த மனுவில் குமாரசாமி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், குன்கா தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி தத்து அல்லது தீபக்மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் ஆச்சார்யா தலைமையிலான வக்கீல் குழுவினர் ஆஜராகின்றனர்.

தி.மு.க., - காங்., - இடதுசாரிகள் வரவேற்பு: கர்நாடக அரசின் மேல்முறையீட்டை தி.மு.க., - காங்., - இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ளனர். தி.மு.க., பொருளாளர் மு.க. ஸ்டாலின் , மக்களின் எதிர்பார்ப்பின் படி ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த எதிர்பார்ப்பு தி.மு.க.விற்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தான். தீர்ப்பு மக்களுக்கு பயன் அளிக்கும்படியாக இருக்கும் என நம்புகிறேன் என்றார். மார்க்., கம்யூ கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட்டில் வரும் தீர்ப்பு மூலம் மீண்டும் ஜெ., முதல்வர் பதவியை இழக்கும் நிலை ஏற்படும் என்றார்.

நீதி வெல்லும் என அ.தி.மு.க., நம்பிக்கை: நீதி வெல்லும், நியாயம் வெல்லும் என்ற எங்களின் நம்பிக்கையை யாராலும் தகர்க்க முடியாது என அ.தி.மு.க., வை சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இது அரசியல் சதி என்றும், அம்மா அரசியலை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். 

ஜெயலலிதா வழக்கு கடந்து வந்த பாதை...

2014 செப்., 27: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெ., வுக்கு 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. நான்கு பேரும் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
செப்., 29: கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமின் மனு தாக்கல்.
அக்., 1: மனு ஏற்க நீதிபதி மறுப்பு 6 நாட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அக்., 7: ஜாமின் வழங்க மறுத்து, மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
அக்., 17: இதையடுத்து ஜெ., உள்ளிட்ட நான்கு பேரும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமின்வழங்கப்பட்டது. இதையடுத்து ஜெயிலில் இருந்து ஜாமினில் வெளிவந்தார்.
2015 ஜன., : சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா மேல்முறையீடு தாக்கல். மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஜன., 2: மனு விசாரணைக்கு வந்தது.
ஜன., 3: தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன் தன்னையும் இவ்வழக்கில் மனுதாரராக சேர்க்க நீதிபதியிடம் மனு. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.ஜன., 5: விசாரணை தொடங்கியது.
மார்ச் 11: விசாரணை நிறைவடைந்தது.
மார்ச்: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அன்பழகன் தரப்பு மனுத்தாக்கல். இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இம்மனு சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

ஏப்., 27: சுப்ரீம் கோர்ட்ன் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமித்தது செல்லாது எனவும், அவரது வாதத்தை நீதிபதி குமாரசாமி ஏற்கக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கினர். மேலும் கர்நாடக அரசு, புதிதாக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்வார். அவர் எழுத்து மூலம் தனது வாதத்தை வழங்கவும் உத்தரவு. மேலும் அன்பழகன் தரப்பும் எழுத்து மூலம் வாதத்தை வழங்க உத்தரவு.
ஏப்., 28: கர்நாடக அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமனம். அவர் தனது வாதத்தை எழுத்து மூலமாக தாக்கல் செய்தார்.
மே 8: மேல்முறையீட்டு வழக்கில் மே 11 தீர்ப்பு வெளியாகும் என அறிவிப்பு.

மே 11: ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
மே 23: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பு .
ஜூன் 5: முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர்., இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜூன் 23: ஜெயலலிதா விடுதலையான தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

Comments