‘நான் தான் காரணமா’ * கொதிக்கிறார் தோனி

Dhoni, India, Captain, Cricketதினமலர் செய்தி : தாகா: ‘‘இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் அனைத்து மோசமான தோல்விகளுக்கும் நான் தான் காரணம் என்றால் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகத் தயாராக உள்ளேன், ஒரு வீரராக அணியின் வெற்றிக்கு உதவத் தயார்,’’ என, தோனி தெரிவித்தார்.
இந்திய ஒருநாள் அணி சமீபகாலமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. உலக கோப்பை தொடர் தவிர, கடைசியாக பங்கேற்ற 6 ஒருநாள் போட்டிகளில் 5ல் (முத்தரப்பு தொடரில் 3, வங்கதேசத்துடன் 2) இந்திய அணி தோற்றது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.


வங்கதேசத்துக்கு எதிராக முதன் முறையாக தொடரையும் இழந்தது.

இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது: ஒவ்வொரு முறை இந்திய அணி தோற்கும் போதெல்லாம் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழும். ஒருவேளை என்னை நீக்கினால் தான் இந்திய கிரிக்கெட் வெற்றி பாதைக்கு திரும்பும் என்றால் அதை நிரூபிக்க வேண்டும். 

விலகத் தயார்:

தற்போது அடையும் அனைத்து மோசமான தோல்விகளுக்கும் நான் தான் காரணம் என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளேன். ஒரு வீரராக அணியின் வெற்றிக்கு உதவத் தயார்.

கேப்டனாக யார் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இது ஒரு பிரச்னையே இல்லை. ஏனெனில் இப்பதவிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கேப்டன் பதவி எனக்கு கொடுக்கப்பட்ட வேலை.  இது அவர்களாக கொடுத்தது. இதனால் பொறுப்பெடுத்து செயல்பட்டேன். இப்போது அதை எடுத்துக் கொள்ள விரும்பினால் மகிழ்ச்சியாக வழிவிடத் தயார். என்னைப் பொறுத்தவரை இந்திய அணி வெற்றி பெற வேண்டும், அவ்வளவு தான். இதற்கு எனது பங்களிப்பு இருக்க வேண்டும்.

ஜடேஜா சரிதான்:

ஜடேஜா தேர்வு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். பொதுவாக ஒவ்வொரு பவுலரின் திறமைக்கு ஏற்ப அவர்களை பயன்படுத்துகிறோம். ஜடேஜாவை முதல் 10 ஓவர்களில் பயன்படுத்த விருப்பம் இல்லை. இதன் பின் வரும் ‘பவர் பிளே’ உள்ளிட்ட ஓவர்களில் அவர் நன்றாகவே செயல்படுகிறார். மற்றபடி இவர் தேர்வை நியாயப்படுத்துவது என்பது கடினம் தான்.

ஏனெனில் பேட்டிங் செய்ய ஜடேஜாவுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. முதல் 20 ஓவர்களில் 4 அல்லது 5 விக்கெட்டுகள் விழுந்து விட்டால் தான், இவருக்கு நல்ல வாய்ப்பு வரும். அதேபோல சர்வதேச போட்டிகளில் அனைத்து இன்னிங்சிலும் 50 அல்லது அதற்கு மேலான ரன்கள் எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. இது முடியாத காரியம். ‘டாப் ஆர்டர்’ நன்றாக விளையாடுவதால் பின் வரிசை வீரர்களை சோதிக்க வாய்ப்பு இருக்காது.

வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகளில் பின் வரிசை வீரர்களுக்கு நெருக்கடி அதிகம் ஏற்பட்ட நிலையில், ஜடேஜா பேட்டிங் குறித்து முடிவுக்கு வருவது கடினம்.

பிளட்சருக்கு பாராட்டு:

முன்னாள் பயிற்சியாளர் பிளட்சரை கடைசிவரை ‘மீடியா’ பாராட்டவே இல்லை. இந்திய அணியுடன் பல ஆண்டும் இணைந்திருந்த இவர், வெற்றிக்கு கடினமாக பாடுபட்டார். பல்வேறு கடின தொடர்கள் வந்தன.

தோல்விக்கு பயிற்சியாளர் உள்ளிட்டோர்களை குற்றம் சுமத்துவது சரியாகாது. ஏனெனில் வீரர்கள் தான் களத்தில் விளையாடுகின்றனர். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை சரி செய்து கொண்டு அவர்கள் தான் திறமை வெளிப்படுத்த வேண்டும்.

அவசரம் வேண்டாம்:

மற்றபடி பயிற்சியாளர் இருந்தால் இதெல்லாம் நடக்காது என்று கூறினால் தவறு. தற்போது ஏராளமான துணை பயிற்சியாளர்கள் உள்ளனர். அவர்கள் வீரர்கள் மீது கவனம் செலுத்துவர்.

இப்போதைக்கு பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது என்பதற்காக அவசரப்பட்டு இதை நிரப்ப வேண்டாம். அது காலியாகவே இருந்து விட்டுப் போகட்டும். இவ்வாறு தோனி கூறினார்.

பயிற்சியாளர் புகார்

தோனியின் பயிற்சியாளர் பன்சல் பட்டாச்சார்யா கூறுகையில்,‘‘ இந்திய அணியின் ‘டிரசிங் ரூம்’ சூழ்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். இதனால் கேப்டன் தோனி ஒரு விதமான ‘டென்ஷன்’ நிலையில் காணப்படுகிறார்,’’ என்றார்.

நெருக்கடி காரணமா

பேட்டிங் ஆர்டர் குறித்து தோனி கூறுகையில்,‘‘ கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக பேட்டிங்கில் 6வது இடத்தில் களமிறங்கினேன். இந்த அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு வழியில் நெருக்கடி இருந்ததால் சரியாக பேட்டிங் செய்ய முடிவதில்லை. சரி அடித்து விளையாடலாம் என முடிவெடுக்கும் போது எதிர் முனையில் ஒரு சில விக்கெட் விழுந்து விடும். அடுத்து நல்ல ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்து விட்டு மீண்டும் அடிக்க முயற்சிக்கும் போது, மறுபடியும் விக்கெட் விழுகிறது. இதனால் தான் மிர்புர் போட்டியில் 4வதாக வந்தேன்,’’ என்றார்.

குழப்பத்தில் உள்ளார்

முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,‘‘ கேப்டன் தோனி குழப்பமான மனநிலையில் உள்ளார். இதனால் ‘கூல்’ கேப்டன் தோனி தற்போது பொறுமையில்லாமல் காணப்படுகிறார்,’’ என்றார். 

வெற்றிக் கேப்டன்

சமீப காலமாக சறுக்கினாலும், ஒருநாள் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டனாக ஜொலிக்கிறார் தோனி. இவ்வரிசையில் ‘டாப்–5’ கேப்டன்கள்:

வீரர் போட்டி வெற்றி தோல்வி டை முடிவு இல்லை வெற்றி சதவீதம்
தோனி 180 100 65 4 11 60.35%
அசார் 174 90 76 2 6 54.16%
கங்குலி 146 76 65 0 5 53.90%
டிராவிட் 79 42 33 0 4 56.00%
கபில்தேவ் 74 39 33 0 2 54.16%

3
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடத்தப்படும் மூன்று முக்கிய தொடர்களான ‘டுவென்டி–20’ உலக கோப்பை (2007), 50 ஓவர் உலக கோப்பை (2011), மினி உலக கோப்பை/சாம்பியன்ஸ் டிராபி (2013) தொடர்களில் கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தார் தோனி.

12
உலக கோப்பை அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் தோனி (12 வெற்றி, 14 போட்டி, ஒரு தோல்வி, ஒரு டை) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் கபில்தேவ் (11 வெற்றி) உள்ளார்.

62
அன்னிய மண்ணில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார் தோனி. இவர், இதுவரை 115 போட்டிகளில் பங்கேற்று 62 வெற்றி தேடித் தந்துள்ளார். இவரை அடுத்து சவுரவ் கங்குலி (58 வெற்றி) உள்ளார்.

183
ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார் தோனி. கடந்த 2005ல் இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் 183* ரன்கள் எடுத்தார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (172 ரன், எதிர்–ஜிம்பாப்வே, 2004) உள்ளார்.

1
ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார் தோனி. கடந்த 2008ல் தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் கோப்பை வென்றது. இதில் மூன்றாவது அணியாக இலங்கை விளையாடியது.

Comments