அமைச்சரவை முடிவு
இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை கடந்த ஜூன் 1ம்தேதி, மேல்முறையீட்டு முடிவை
எடுத்தது. இதையடுத்து அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சாரியா மற்றும்
அவரது உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் மேல்முறையீடு மனு
தாயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
23 நாட்கள்
மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்த 23 நாட்களுக்கு பிறகு தற்போது
சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை கேட்டும் அம்மனுவில்
கோரப்பட்டு்ள்ளது. அவ்வாறு தடை கொடுக்கப்பட்டால் ஜெயலலிதா தனது முதல்வர்
பதவியை இழக்க வேண்டிவரும். ஆர்.கே.நகர் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
ஏனெனில் ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்தால், சிறப்பு
நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின்படி ஜெயலலிதா குற்றவாளியாகவே
கருதப்படுவார்.
ஜூலை 1ல் திறப்பு
ஆர்.கே.நகரில் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் அதை மனதில் வைத்து
அவசரமாக கர்நாடகா இந்த வழக்கை தாக்கல் செய்ததாக அதிமுக தரப்பில் சிலருக்கு
சந்தேகம் எழலாம். ஆனால், அப்படியில்லை என்கிறது கள நிலவரம்.
சுப்ரீம்கோர்டுக்கு தற்போது கோடை விடுமுறை காலமாகும். அவசர வழக்குகளை
விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம், ஜூலை 1ம்
தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
தேர்தல் முடிந்துவிடுமே..
ஜெயலலிதா மீதான மேல்முறையீட்டு மனு ஜூலை 1ம் தேதிக்கு பிறகுதான்
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, என்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும் என்பது அறிவிக்கப்படும். எனவே அதற்குள் ஆர்.கே.நகர்
தேர்தல் முடிந்துவிடும். மேலும், இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள
கர்நாடகம் கோரிக்கைவிடுக்கவில்லை. எனவே, ஜூலை மாதம் எப்போது வழக்கு
விசாரணைக்கு வரும் என்பதில் உறுதித்தன்மை இல்லை.
அவசர வழக்கில்லை
இதுகுறித்து ஆச்சாரியா ஏற்கனவே அளித்த பேட்டியில், "ஜெயலலிதாவை விடுதலை
செய்த உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீடு செய்யப்படுவதால், இதை அவசர வழக்காக
கருதி சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய முடியாது. எனவே பொறுமையாக
மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருகிறோம்" என்றார். ஜூலை கோர்ட் திறந்த
பிறகு அப்பீல் செய்வதை விட இப்போது அப்பீல் செய்தால்தான் கோர்ட்
திறந்ததும், முதலில் இவ்வழக்கு பரிசீலிக்கப்படும் என்பதே, அரசு தரப்பு
முடிவுக்கு காரணமாகும்.
Comments