ராகுலுக்கு ரகசிய திருமணமா? குடும்பத்தோடு வெளிநாடு சென்றதால் பரபரப்பு

தினமலர் செய்தி : புதுடில்லி: காங்., தலைவர் சோனியா, மகள் பிரியங்கா மற்றும் துணைத் தலைவர் ராகுல், திடீரென வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ராகுலின் திருமணத்- திற்காகவே, மூவரும் வெளிநாடு சென்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளதால், கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்பாடு:


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நேற்று நாடு முழுவதும், யோகா பயிற்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள், மாணவ - மாணவியர் மற்றும் சாதுக்கள், யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலுக்கு, மத்திய அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து, எவ்வித முன்னறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், காங்., தலைவர் சோனியா மற்றும் மகள் பிரியங்கா, திடீரென வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவர் ராகுலும், தனியாக வெளிநாடு புறப்பட்டு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மூவரும் வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ள விவகாரம், கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் ராகுலுக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும், அதன் காரணமாகவே, மூவரும் வெளிநாடு சென்றுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், கட்சி சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால், கட்சித் தொண்டர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விளக்கம்:

இதுகுறித்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறிய தாவது:கட்சி தலைவர் சோனியா, சொந்த காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளார்; அவருடன், மகள் பிரியங்காவும் சென்றுள்ளார். சோனியா எதற்காக செல்கிறாரோ, அதே காரணத்திற்காக, துணைத் தலைவர் ராகுலும் வெளிநாடு சென்றுள்ளார். தற்போது இதுகுறித்து, இதற்கு மேல் விளக்கம் அளிக்க முடியாது; மூவரும், விரைவில் நாடு திரும்புவர். இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த ஏப்ரலில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல், 'விரைவில் நான் திருமணம் செய்யப் போகிறேன்; என்னுடைய இந்த முடிவால், தாய் சோனியா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்; நான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்பதை அறிய, உங்களைப் போலவே, என் தாயும் ஆவலுடன் இருக்கிறார்; விரைவில், உங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பேன்' என்றார்.

ராகுல் தன் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய இரு மாதங்களில், குடும்பத்தோடு, திடீரென வெளிநாட்டிற்கு சென்றுள்ளதே,பரபரப்புக்கு காரணம்.

Comments