நடிகர் சங்க விவகாரம் மதுரை ஆதீனம் பஞ்சாயத்து தூதுவராக செயல்பட உள்ளதாக அறிவிப்பு

தினமலர் செய்தி : ''நடிகர் சங்க விவகாரத்தில், தூதுவராக செயல்பட்டு, பிரச்னையை சுமுகமாக முடிக்க, களமிறங்கி இருக்கிறேன்,'' என, மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக எழுந்த பிரச்னையை அடுத்து, சங்கத்தின் நிர்வாக அமைப்பில் பல சர்ச்சைகள் வெடித்தன. ஒன்றாக இருந்த சங்கம், இரண்டாக பிளவு பட்டது. சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியாகவும், நடிகர் விஷால் தலைமையில், மற்றொரு அணியாகவும் செயல்படுகின்றனர்.
நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணியினரை எதிர்த்து களமிறங்கப் போவதாக, விஷால் தரப்பினர் அறிவித்து உள்ளனர். ஆனால், தேர்தலில் போட்டி ஏற்படுவதை, எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற முயற்சியில், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலர் ராதாரவி ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.இதற்காக, இரு அணியினருக்கும், பொதுவானவராக இருக்கும், மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை, ராதாரவியும், சரத்குமாரும், அடுத்தடுத்து சந்தித்துப் பேசியுள்ளனர். அவரை, சமாதான தூதுவராக செயல்படும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதுகுறித்து, மதுரை ஆதீனம், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில், ஆன்மிகத்தையும், சினிமாவையும், அரசியலையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது; இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று, பின்னிப் பிணைந்தவை.அதனால் தான், சன்னிதானமாக இருக்கும் நான், அரசியல் பேச வேண்டியதாகிறது; சினிமாவைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

சமூகத்தின் பால் இணைந்து கிடக்கும், இந்தத் துறைகளில் இருக்கும் முக்கியஸ்தர்கள் அனைவரும், என் பால் ஈடுபாடு கொண்டவர்கள். அந்த வகையில், சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள், என் ஆசி பெற்றவர்களே.குறிப்பாக, நடிகர்கள் சிவகுமார், விஷால், நாசர், சரத்குமார், ராதாரவி உட்பட, அத்தனை பேரும் என் மீது அன்பு கொண்டவர்கள்; நான் சொன்னால், அவர்கள் எதையும் மீற மாட்டார்கள்.

'நடிகர் சங்கத்திற்குள் குழப்பம் விளைவிக்க, சிலர் முயல்வதை தடுக்க வேண்டும்' என, சரத்குமாரும், ராதாரவியும், என்னை சந்தித்துக் கேட்டுக் கொண்டனர். நடிகர் சங்க கட்டட பிரச்னையில், நடிகர்கள் விஷால், சிவகுமார், நாசருக்கு இருக்கும் அதிருப்தியை, ஒரு நிமிடத்தில் தீர்த்து விடலாம்.

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக, எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால், அவர்கள் சமாதானமாகி விடுவர். அதை செய்ய, சரத்குமாரும், ராதாரவியும் தயாராக உள்ளனர்.நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படக் கூடாது என்பது தான், எல்லாருடைய எண்ணமும். தேர்தல் நடக்காமல், ஒருமித்த எண்ணம் அடிப்படையில், சரத்குமார் மீண்டும், நடிகர் சங்கத்துக்கு தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும்.இதற்காக, எதிர் தரப்பிடம் பேசி, சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் நான் இறங்கி இருக்கிறேன்; நல்லபடியாகவே, முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments