ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை திணித்ததே ஜெ., தான் : விஜயகாந்த் கொதிப்பு

தினமலர் செய்தி : சென்னை : இரண்டு நாட்களுக்கு முன் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா பேசிய பேச்சிற்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று பதிலளித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை திணித்ததே ஜெ., தான் எனவும், தமிழகம் மின்மிகை மாநிலம் எனக் கூறி முழு பூசணிக்காயை சேற்றில் மறைக்க பார்க்கிறார் ஜெ., எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜெ., தனது பிரசாரத்தின் போது , ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் சதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டே இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றார். இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், ஜெ.,வின் பிரசார உரைக்கு பதிலளித்து வியஜகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சிறப்பு நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு, பதவியை இழந்துவிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க மனம் இல்லாமல், அவசர அவசரமாக எம்.எல்.ஏ., வெற்றிவேலை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் பத்தே நாளில் தேர்தலை கொண்டுவந்தது யார்?. ஆர்.கேநகர் தொகுதியில் இடைத்தேர்தல் திணிப்புக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவே முழுமுதற் காரணம் என அத்தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் 4992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் கூடுதல் மின்சாரத்திற்காக 2011ல் இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எந்த திட்டங்களைத் துவக்கி, அதன் மூலம் இந்த கூடுதல் மின்சாரத்தை பெற்றார் என்பதை தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கமுடியுமா? சென்னையை தாண்டினால் அனைத்து இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. மின்பற்றாக்குறையை மறைப்பதற்காக தனியார் மின்நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை பெறுவதுதான் உண்மை.

பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் அதன் நிலையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. இந்த உண்மைகளையெல்லாம் "முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல" மறைக்கப் பார்கிறார் ஜெயலலிதா என தமிழக மக்கள் கூறுகிறார்கள்" . இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Comments