கோவிலில் பிரபாகரன்-, வீரப்பன் சிலை போலீஸ் உத்தரவால் அடையாளம் அகற்றம்

தினமலர் செய்தி : கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே, அய்யனாரப்பன் கோவிலில், பிரபாகரன், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. போலீசார் உத்தரவை அடுத்து, சிலைகளில், அவர்களின் அடையாள சின்னங்கள் அழிக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சடையாண்டிக்குப்பம் கிராமத்தில், அய்யனாரப்பன் கோவில் உள்ளது. 2010ல், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.


கோவில் வளாகத்தில், அய்யனாரப்பன் சுவாமி சிலைக்கு அருகில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் ஆகியோருக்கு, சிமென்ட் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அமைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

தற்போது, இதை அறிந்த போலீசார், சடையாண்டிக்குப்பம் கிராமத்திற்குச் சென்று, கோவிலை பார்வையிட்டு, பிரபாகரன், வீரப்பன் சிலைகளை அகற்ற உத்தரவிட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அங்கு, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.போலீசார் உத்தரவையடுத்து, கோவிலில், பிரபாகரன் உருவச் சிலையில் இருந்த தொப்பி, பெல்ட், துப்பாக்கி மற்றும் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சிலையில் இருந்த மீசை ஆகியவற்றை கிராம மக்கள் அகற்றினர்.

கோவிலில், பிரபாகரன், வீரப்பனுக்கு சிலை அமைத்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments