ஜெ. விடுதலைக்கு தடை; மக்கள் பிரதிநிதி அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம்... அப்பீல் மனுவில் கர்நாடகா!
அப்பீலுக்கு நெருக்கடி கொடுத்த மூவர்
நீதிபதி சி.ஆர். குமாரசாமி அளித்த தீர்ப்பில் பல்வேறு அடிப்படை தவறுகளும்,
கணக்குப் பிழைகளும் இருக்கிறது. இதனால் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை
எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்
பி.வி.ஆச்சார்யா, கர்நாடகா சட்டத்துறை செயலர் சங்கப்பா, அரசு தலைமை
வழக்கறிஞர் ரவிவர்ம குமார் ஆகியோர் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
இதனடிப்படையில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்வது என கடந்த 1-ந் தேதி கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டது.
அப்பீல் தயாரிப்பில்...
இதையடுத்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையில் அவரது உதவி
வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் ஜெயலலிதா
தரப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆச்சார்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க பவானிசிங்கின் உதவியாளராக இருந்த
முருகேஷ் எஸ்.மரடியும் கடந்த சில நாட்களாக இரவு பகலாக உழைத்தார்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் வருமானம், செலவு, கடன், இருப்பு
ஆகியவை குறித்து தனித்தனியாக அட்டவணை தயாரிக்கப்பட்டது. நீதிபதி குமாரசாமி
தவறாக கணக்கிட்ட கடன் தொகை, முரணாக ஏற்றுக்கொண்ட வருமானம் ஆகியவை சுமார்
150 பக்க பச்சை நிற முத்திரைத் தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஆலோசனை
ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரித்த அரசு வழக்கறிஞர்
பி.வி.ஆச்சார்யா, அதனை கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா,
சட்டத்துறை செயலர் சங்கப்பா ஆகியோருடன் விவாதித்தார்.
இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவுக்கு எதிராக வலுவான மேல்முறையீட்டு மனுவை
தாக்கல் செய்வது குறித்து ஆச்சார்யா சமீபத்தில் கர்நாடக சட்ட அமைச்சர்
டி.பி.ஜெயச்சந்திராவையும், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரையும்
சந்தித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதன்பின்னரே ஜெயலலிதாவின்
விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று
மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
முக்கிய அம்சங்கள்...
இந்த மேல்முறையீட்டு மனுவில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது
கேலிக்கூத்தானது; இந்த விடுதலைக்கு தடை விதிக்க வேண்டும்; மக்கள்
பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து ஜெயலலிதாவை தகுதி நீக்கம் செய்ய
வேண்டும் என்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Comments