ஜெ. விடுதலையை எதிர்த்து 4,000 பக்கங்களுடன் அப்பீல் மனுவை ஓரிருநாட்களில் தாக்கல் செய்கிறது கர்நாடகா!

Jayalalithaa appeal in Supreme Court runs into 4,000 pagesOneIndia News : டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட அப்பீல் மனுவை உச்சநீதிமன்றத்தில் ஓரிருநாட்களில் கர்நாடகா அரசு தாக்கல் செய்ய உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை, ரூ100 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பில் கூட்டல் பிழைகள் இருப்பதாக கடும் விமர்சனம் எழுந்தது. மேலும் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தி வந்தார். இதையடுத்து கர்நாடகா அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நாளை அல்லது ஓரிருநாட்களில் இம்மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று ஒன் இந்தியாவுக்கு கர்நாடகா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனு தற்போது டெல்லி கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இதில், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கூட்டல் பிழைகள் இருந்தததுதான் ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்து விடுதலை செய்யப்படவும் காரணமாக இருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments