டில்லி யோகாவில் கின்னஸ் சாதனை: மோடி தலைமையில் 35000 பேர் பயற்சி

தினமலர் செய்தி : புதுடில்லி : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டில்லி ராஜ்பாத்தில் இன்று நடைபெற்ற மெகா யோகா நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர், அமைச்சர்கள், உயரதிகாரிகள், மாணவர்கள், பொது மக்கள் என 35,000 பேர் கலந்து கொண்டனர்.


சர்வதேச யோகா தினம் :

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஐ.நா.,வில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'யோகா எங்களின் பண்டைய பாரம்பரியம் அளித்த விலைமதிப்பற்ற பரிசு. யோகா என்பது மனம், உடல். எண்ணம், செயல் என அனைத்தையும் ஒன்றிணைக்கக் கூடியது,' என தெரிவித்தார். மோடியின் சர்வதேச யோகா தின கோரிக்கைக்கு 170க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதைடுத்து, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., அறிவித்தது.

கின்னஸ் சாதனை :

முதல் சர்வதேச யோகா தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்ட மத்திய அரசு , மக்களை ஒன்று திரட்டி புதிய கின்னஸ் சாதனை படைக்க முடிவெடுத்தது. கின்னஸ் நிறுவனத்திடம் இது குறித்து விண்ணப்பிக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை டில்லி ராஜ்பாத்தில் நடந்த யோகா பயிற்சியில் 35,000 பேர் பங்கேற்றனர். இதன் மூலம், முந்தைய 2005ம் ஆண்டு குவாலியரில் விவேகானந்த கேந்திரியத்தில் 29,973 பேர் கூடி செய்த யோகா நிகழ்ச்சியின் சாதனை முறியடிக்கப்பட்டது.

ஒன்றான கட்சிகள் :

அரசியல் மற்றும் கட்சி பேதங்களை மறந்து நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டில்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்களுடன் இணைந்து அரசியல் தலைவர்கள், தூதர்கள், உயரதிகாரிகள் என அனைவரும் யோகா செய்தனர். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் சிம்லாவிலும், யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். .

உலகை ஒன்றிணைத்த யோகா :

ஜப்பான், மலேசியா, சீனா, பாகிஸ்தான் என 191 நாடுகளில் உள்ள 251 நகரங்களில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏமன் தவிர மற்ற அரபு நாடுகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக யோகா தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் இஸ்லாமாபாத்தில் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. காபூல் தூதரகத்தில் அதிகாரிகள் யோகா செய்தனர். யோகா தினத்திற்காக வழிவகுத்த இந்தியாவிற்கு ஐ.நா., பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Comments