24 ஆண்டுகளுக்கு முன்பே தபால்தலை வெளியிட்டு யோகாவிற்கு கவுரவம்

தினமலர் செய்தி : பாட்னா: சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாட இந்தியா தயாராகி வந்தாலும், 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் யோகா குறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனை மறந்துவிட்டு தற்போது யோகாவிற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.


மத்தியில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். மோடி ஐ.நா.சென்றிருந்த நிலையில் யோகா முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐ.நா.கடைபிடிக்கிறது. இதனை போற்றும் விதமாக டில்லி ராஜ்பாத்தில் மெகா யோகா நிகழ்ச்சி நாளை நடக்கிறது.இதனை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

தபால்தலை வெளியீடு

இந்நிலையில் கடந்த 1991-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மத்திய அரசு சார்பில் நான்கு வித ஆசனங்களை விளக்கி முறையே ரூ. 2, ரூ.5, ரூ.6.5, ரூ.10 ஆகிய விலைகளில் , புஜங்காசனா, தனுராசனா, உஸ்த்ராசனா, உதித்தா திரிகோனாசனா என்ற நான்கு ஆசனங்களில் தபால்தலை வெளியிடப்பட்டது.
இது குறித்து தபால் தலைகள் சேகரிக்கும் ஆர்வலர் என்.கே. அகர்வால் கூறுகையில், வெளியிட்ட பின்னர் தபால் தலைக்கு உரிய வரவேற்பின்றி காணாமல் போய்விட்டது.எனினும் ரூ. 500 வரை கொடுத்துதான் அது போன்ற தபால் தலைகள் வாங்கப்பட்டன என்றார்.

இந்திய-சீனா யோகா மாநாடு
தபால்தலை சேகரிப்பு உலக அமைப்பின் உறுப்பினர் பிரதீப் ஜெயின் கூறுகையில், யோகாசாஸ்திரா என்ற புத்தகத்தினை எழுதிய மகரிஷிபதஞ்சலி 2009-ம் ஆண்டு யோகா தபால் வெளியிட ப்பட்டது. இந்தியாவினை தவிர்த்து முதன்முறையாக வெளிநாடுகளில் சீனா தான் யோகா தபால் தலை வெளியிட்டது. இதில் உலக புகழ்பெற்ற யோகா குரு பி.கே.எஸ். அய்யங்கர் அவர்களின் பல்வேறு யோகாசனங்கள் குறித்த தபால் தலையை சீனா தபால்துறை வெளியிட்டது.அதன்பின்னரே 2014-ம் ஆண்டு ஜுன் 17-ம் தேதியன்று சீனாவின் குவாங்ஸு மாகாணத்தில் இந்திய-சீனா யோகா மாநாடு நடந்தது என்றார்.

எனவே 24 ஆண்டுகளுக்கு முன்னரே யோகாவிற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லையென்றாலும், அதனை முற்றாக மறந்துவிட்டு, இப்போது பிரதமர் மோடியின் முயற்சியால் தற்போது யோகாவின் அவசியம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாளை நடக்க உள்ள சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி தபால் தலைகளை வெளியிடஉள்ளார்.

Comments