கடலை மிட்டாயில் 'கடல்' அளவு ஊழல்: ரூ.200 கோடி சுருட்டினார் மகாராஷ்டிரா பெண் அமைச்சர்?

தினமலர் செய்தி : மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கடலை மிட்டாய் மற்றும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்ததில், ரூ. 200 கோடி முறைகேடு செய்ததாக அம்மாநில பெண் அமைச்சர் பங்கஜ் முண்டே மீது பரபரப்பு புகார் கிளம்பியது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இம்மாநிலத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர்களுக்கு வாட்டர் பில்டர், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யவும், மாணவர்களுக்கு கடலை மிட்டாய் வாங்கிடவும் டெண்டர் விடப்பட்டிருந்தது. மிகக் குறைந்த விலைக்கு டெண்டர் கோரப்பட்டது.

ரூ. 80 கோடி மிட்டாய் ஊழல்

இந்த டெண்டருக்கு ஒப்புதல் அளித்து கடலை மிட்டாய் கொள்முதல் செய்ததில் ரூ. 80 கோடியும், பள்ளிக்கு தேவையான பாய்கள், வாட்டர் பில்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலில் ரூ. 120 கோடி என ரூ. 200 கோடி முறைகேடு நடந்ததாக பங்கஜ் முண்டே மீது புகார் எழுந்துள்ளது. ரூ. 3 லட்சம் மதிப்பிலான அரசு டெண்டர்கள் இ-டெண்டர் மூலம் நடைபெறுவது வழக்கம். இதை மீறி இதில் மொத்தம் 24 ஒப்பந்தங்களுக்கு பங்கஜ் முண்டே நேரிடையாக ஒப்புதல் அளித்து ஆதாயம் அடைந்ததாக கடந்த பிப்ரவரி மாதமே காங. கட்சி புகார் தெரிவித்தது.

இதையடுத்து பங்கஜ் முண்டே மீது உரிய விசாரணை நடத்தி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங். கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். மாநில லஞ்ச ஒழிப்பு போலீசில் பங்கஜ் முண்டே மீது புகார் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநில மறைந்த பா.ஜ. மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, மகள் தான் பங்கஜ் முண்டே என்பது குறிப்பிட தக்கது.

Comments