விடுதலை
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா மற்றும் நால்வரின்,
மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதா, தனது
வருவாய்க்கு அதிகமாக 8.12 சதவீதம் சொத்து சேர்த்துள்ளார். 10 சதவீதத்துக்கு
குறைவாக இருப்பதால் தப்பில்லை என்று கூறி விடுதலை செய்தது.
மேல்முறையீடு
இந்நிலையில், வழக்கி்ல் அரசு தரப்பாக செயல்படும், கர்நாடக அரசு, ஹைகோர்ட்
தீர்ப்பை எதிர்த்து, நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த மேல்முறையீட்டில், ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் குறித்து முக்கியமான
சில முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரே காரணத்திலும் ஓட்டை
இதுகுறித்து மேல்முறையீட்டு மனுவை தயாரித்த சட்ட குழுவை சேர்ந்த ஒருவர்
'ஒன்இந்தியாவிடம்' கூறியது: சொத்துக்குவிப்பு சதவீதத்தின் அடிப்படையில்தான்
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். அந்த ஒரே காரணத்துக்காகவே விடுதலை
செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதில்தான் பெரிய தவறே நடந்துள்ளது. இந்த தவறை
சுட்டிக்காட்டிதான் அப்பீல் மனு தயாரித்துள்ளோம்.
அவசரம் இல்லை
அப்பீல் மனு மீதான விசாரணை ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று
எதிர்பார்க்கிறோம். அதேநேரம், இதை அவசர மனுவாக கருதி விசாரிக்குமாறு
நாங்கள் கோரப்போவதில்லை. உச்சநீதிமன்ற வழக்கு எண் வரிசைப்படி, எப்போது
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமோ, அப்போது எடுத்துக்கொள்ளட்டும் என்று
பொறுமையாக காத்திருக்க உள்ளோம்.
கூட்டினாலும், மதிப்பிட்டாலும் சிக்கலே
ஹைகோர்ட் சரியாக கூட்டல் கணக்கு செய்திருந்தால், வருவாய்க்கு அதிகமாக
சேர்த்த சொத்த மதிப்பு ரூ.16.32 கோடிகளாக உயர்ந்திருக்கும். இது
வருவாய்க்கு அதிகமான சதவீத கணக்கில் 76.7 ஆகும். கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி
குமாரசாமி குறிப்பிட்ட சொத்துக்களின் மதிப்பை கூட்டினால்தான் இந்த தொகை
வருகிறது. ஆனால், குமாரசாமி, மதிப்பீட்டையே சரியாக செய்யவில்லை. அப்படி
சொத்துக்களை சரியாக மதிப்பீடு செய்தால் சொத்து மதிப்பு 168 சதவீதமாக
கூடிவிடும். குமாரசாமியின், கணித தவறை மட்டும் சரி செய்தால்கூட, ஜெயலலிதா
சொத்துமதிப்பு 76.7 சதவீதம் கூடுதலாகவும், சொத்துக்கள் முழுவதையும் சரியாக
மதிப்பிட்டால் 168 சதவீதமாகவும் கூடிவிடும் என்பதுதான் இதில் உள்ள முக்கிய
அம்சம்.
நீதிபதி பிடிவாதம்
ஜெயலலிதாவின் சொத்துக்களை நீதிபதி குமாரசாமி, சரிவர மதிப்பீடு செய்யவில்லை
என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, கட்டுமானத்துக்கு ரூ.8.68
கோடியை செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பே ஒப்புக்கொண்டது. ஆனால்,
நீதிபதியோ, அதை ரூ.5.1 கோடிதான் என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார்.
குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பே குறைத்து மதிப்பிட்ட ஒரு செலவீனத்தை, நீதிபதி
இன்னும் குறைத்து மதிப்பிட்டது விந்தையிலும், விந்தை.
168 சதவீத உயர்வு
ஜெயா பப்ளிகேஷன்ஸ், திருமண செலவீனங்கள் போன்றவற்றிலும், நீதிபதியே ஒரு
முடிவுக்கு வந்து கணக்கை முடித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை
செய்துள்ளார். திருமணச்செலவு, ஜெயா பப்ளிகேஷன்ஸ் போன்றவற்றின்
கணக்கீடுகளில் நீதிபதி குமாரசாமி செய்த தவறுகளை குறிப்பிட்டு, இதையெல்லாம்
சரியாக கணக்கீடு செய்தால் ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்து
மதிப்பு 168 சதவீதமாக உயரும் என்று மனுவில் கூறியுள்ளோம். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
Comments