கர்நாடகா முடிவுக்கு காத்திருக்கும் தி.மு.க.,: ஜெ., விடுதலையை எதிர்த்து 'அப்பீல்' எப்போது?

தினமலர் செய்தி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு, 'அப்பீல்' செய்யும் என, தி.மு.க., எதிர்பார்க்கிறது.
இணைத்து கொள்ளும் மனு :

அதன்பின், கர்நாடக அரசு வழக்கில், தங்களையும் இணைத்துக் கொள்ளும் மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, கடந்த 11ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நால்வரும், விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பில் கணக்கு குளறுபடிகள் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனாலும், அது இன்னும் சரி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், 'பெங்களூரு, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு, இது தகுதியான வழக்கு' என, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்து உள்ளார்.

'ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவில், கர்நாடக அரசை, பிரதிவாதியாக சேர்க்காதது; சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் எழுத்துப்பூர்வ வாதத்துக்கு மட்டுமே அனுமதியளித்தது மற்றும் தீர்ப்பில் உள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி, கர்நாடக அரசு சார்பில், மேல்முறையீடு செய்ய வேண்டும்' என, ஆச்சார்யா, கர்நாடக அரசை கேட்டுக் கொண்டு உள்ளார். கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததும், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற்ற பின், மேல்முறையீட்டு மனு, விசாரணைக்கு எடுக்கப்படும்.


மேல்முறையீட்டு மனு:

தி.மு.க., பொதுச் செயலருக்கு, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய தகுதி இருந்தும், 'கர்நாடக அரசு அதை செய்யட்டும்' என, தி.மு.க., தரப்பு காத்திருக்கிறது. மேல்முறையீட்டு வழக்கோடு இணைத்து கொள்ளலாம் என, காத்திருக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து விட்டாலும், அடுத்தகட்ட செயல்பாடுகளில், மிகுந்த கவனமாகவே, அ.தி.மு.க., தரப்பு இருக்கிறது. 'உச்ச நீதிமன்றத்திலும், தங்களுக்கு சாதகமான உத்தரவு வந்தால் தான், இதற்கு முற்றுப்புள்ளி விழும்' என்பதால், எச்சரிக்கையாக இருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை திடமாக எதிர்கொள்ள, தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக, 2.82 கோடி அளவுக்குத் தான் சொத்துகளை சேர்த்துள்ளார்; ஏற்கனவே வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் அது உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., தரப்பு முடிவு :

உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரும்போது, இந்த வாதத்தையே வலுவாக வைத்து வாதாட, அ.தி.மு.க., தரப்பு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில், சுட்டிக் காட்டப்படும் கணக்கு குளறுபடிகளை சரி செய்வதற்காக, மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கே, மீண்டும் வழக்கை திருப்பி அனுப்பவும், உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வாய்ப்பிருப்பதாகவும், சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments