தினமலர் செய்தி : ஷாங்காய்: பிரதமர் மோடி ஷாங்காய் டவுண்டவுண் பகுதியில் இந்திய
வம்சாவளியினர் கூடிய கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில் ; என்
மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டது. இதனை பொய்யென நிரூபித்தேன் . இந்திய
மக்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தியாவை முன்னேற்ற
பாதைக்கு அழைத்து செல்வேன் என்றார். இந்திய வம்சாவளியினர் 5
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். பிரதமர் மோடிக்கு இந்தியர்கள்
சிறப்பான வரவேற்பு அளித்தனர். தேசிய கொடியை ஏந்தியபடி மோடி, மோடி என
கோஷமிட்டபடி வரவேற்றனர்.
நான் சாதாரண மனிதன் : இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில்; நமஸ்தே ! கடந்த ஆண்டு தே நாளில் நீங்கள் எல்லோரும் இந்திய தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இருந்தீர்கள். இந்த மே 16 என்னால் மறக்க முடியாத நாள். உலகம் முழுவதும் நமது வெற்றி எதிரொலித்தது. அது என்னவாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியும் . எனது வாழ்க்கை குறிப்பை பார்த்தால் என்னை யாரும் பிரதமர் என்று யாரும் அழைக்க முடியாது. நான் சாதாரண மனிதன். இந்தியாவில் தான் சாமானியன் பிரதமராக தேர்வு செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. வாழும் இந்தியர்களை கண்டு உலகமே வியக்கிறது . சீனாவில் வாழும் இந்தியர்கள் அன்பானவர்கள், அமைதியானவர்கள் என்ற சிறப்பை பெறுகிறீர்கள்.
விமர்சனங்களை பொய்யாக்கினேன் : கடந்த தேர்தலில் இது போன்ற மாற்றம் வரும் என யாராலும் கற்பனையில் கூட நினைத்திருக்க முடியாது. சிலர் சுய நலத்திற்காக என் மீது அபாண்ட பழி சுமத்தினர். குஜராத்தை தவிர இவனுக்கு என்ன தெரியும் என எள்ளி நகையாடியவர்கள் இன்று காணாமல் போய் விட்டனர். என் மீது எழுந்த அனைத்து விமர்சனங்களையும் பொய்யாக்கினேன். பா.ஜ., ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டில் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். நான் கடுமையாக உழைக்கிறேன். விமர்சனங்கள் என்னை கூடுதலாக உழைக்க தூண்டியது. காரணம் இந்திய மக்கள் என் மீது அமோக நம்பிக்கை வைத்துள்ளனர். எனது கடும் உழைப்பும் ,கற்பித்தலும் தொடர்ந்து இருக்கும். நான் வாழ்க்கையில் ஒரு நாளைக் கூட வீணாக்கியதும் இல்லை. ஓய்வெடுத்ததும் இல்லை.
எனது சீன பயணத்தை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் தலைக்குனிவில் இருந்து இந்தியா இப்போது தலை நிமிர்ந்து நிற்கிறது. நான் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வேன். இவ்வாறு மோடி பேசினார்.
பயங்கரவாதம் - புவிவெப்பமயமாதல் முக்கிய பிரச்னை: சீனாவில் புடான் பல்கலை.,யில் காந்திய கொள்கை இந்திய கல்வி மையம் திறந்து வைத்து மாணவர்கள் இடையே பிரதமர் மோடி பேசினார்.
ஷாங்காயில் புடன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகையில்; இது வரலாற்று சிறப்பு மிக்க தினம். இது ஒரு மங்களகரமாக மறக்க முடியாத நாள். இந்த இனிமையான நாளில் உங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த உலகில் உள்ள ஒரு சில அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த வாய்ப்பை எனக்களித்த உங்களுக்கு நன்றி. பொருளாதாரத்திற்கும் சுற்றுலாவிற்கும் பாதை அமைப்பது சுலபம். ஆனால் அறிவு கதவை திறப்பதற்கு உள்ளார்ந்த வலிமை வேண்டும். காந்தியின் கொள்கைகளை பரப்புவதற்கான வழியை சீனா இன்று திறந்துள்ளது. இதனை நான் சிறப்பு வாய்ந்த நாள் என குறிப்பிட்டேன். பண்டை கால வரலாற்றை பார்த்தால் இந்தியர்களும், சீனர்களும் அறிவு தாகம் மிக்கவர்களாக இருந்தனர் .
21 ம் நூற்றாண்டு ஆசியாவுடையதாக இருக்கும். மக்கள் வளம் பெற்று வாழ இந்தியாவும், சீனாவும் இணைந்து பணியாற்ற வேண்டும். புவி வெப்பமயமாதலும், பயங்கரவாதமும் உலகின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இரண்டையும் ஒழிக்க காந்திய கொள்கைகள் உதவும். இவ்வாறு மாணவர்கள் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டார்.
Comments