ஜெ.,க்காக பதவி விலகுவது புண்ணியம்

தினமலர் செய்தி : மதுரை : மதுரை மத்திய தொகுதியில் ஜெ., போட்டியிடுவதற்காக எனது எம்.எல்.ஏ.,பதவியை ராஜினாமா செய்வதை புண்ணியமாக நினைக்கிறேன் என தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். 2011ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் உள்ளிட்ட 26 பேரையும் வெற்றி பெற செய்தது அம்மா தான். அவர் கொடுத்த பதவி தான் இது. சூழ்ச்சியாளர்களின் சதி வலைகளை அம்மா தகர்தெறிந்து விட்டார். நேற்று அம்மாவை சந்தித்து எனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன். அவருக்காக பதவி விலகுவது நான் செய்த புண்ணியம் என தெரிவித்துள்ளார்.


சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பினால் அவருக்காக தான் தனது எம்.எல்.ஏ.,பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்ந்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தரராஜனும், மதுரை மத்திய தொகுதியில் ஜெ., போட்டியிட விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக பேட்டி அளித்துள்ளார். எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஜெ., முடிவு செய்வதற்கு முன்னதாக மற்ற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தானாக முன்வந்து தங்கள் தொகுதியில் போட்டியிட அழைப்பு விடுகின்றனர். இதன் மூலம் ஜெ.,க்கு தங்களின் ஆதரவை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Comments