கர்நாடக முடிவு என்ன? :
ஜெ., விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு விபரங்கள் குறித்து ஆய்வு செய்ய
சட்டத்துறைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. சட்டத்துறையின் பதிலை பொறுத்தே
அப்பீல் செய்வதா, வேண்டாமா என நாங்கள் முடிவு செய்வோம் என கர்நாடக முதல்வர்
சித்தராமைய்யா கூறினார். ஆனால் சட்டத்துறையோ இதில் அரசு வக்கீலான
ஆச்சாரியாவின் முடிவை கேட்டுக் கொள்ளுங்கள் என கூறி நழுவியது. ஆனால்
ஆச்சார்யா, அப்பீல் செய்ய பரிந்துரை அளித்தார். இதற்கு பிறகும் தங்களின்
முடிவு என்ன என கர்நாடக தெளிவுபடுத்தாமல் மவுனம் காத்தது. இந்நிலையில் மே
22ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் க;ட்டத்தை நடத்தப் போவதாக ஜெ., அறிவித்ததும்,
மே 21ம் தேதி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அப்பீல் குறித்து இறுதி முடிவு
எடுக்கப் போவதாக கர்நாடகா அறிவித்தது.
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் :
கர்நாடகாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரியாத நிலையில், அடுத்த
கட்ட நடவடிக்கையில் அதிமுக இறங்கி உள்ளது. தீர்ப்பு வெளியானது முதல்
அமைச்சர்களையும், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் அடிக்கடி சந்தித்த ஜெ., மே
22ம் தேதி காலை 7 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும்
எனவும், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்
எனவும் அறிவித்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முடிந்ததும்
ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், இதனால்
அன்று மாலையோ அல்லது மே 23ம் தேதியோ ஜெ.,முதல்வராக பதவியேற்க உள்ளதாக
தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக
எம்.எல்.ஏ.,வெற்றிவேல் ராஜினாமா செய்துள்ளதால், அந்த தொகுதியில் ஜெ.,
போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
அப்பீலுக்கு தயக்கம் :
ஜெ.,க்கு
எதிராக அப்பீல் செய்யுமாறு கர்நாடக அரசை தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து
வலியுறுத்தலும், காங்., தலைமை மூலமாக அழுத்தமும் கொடுத்து வருகின்றன.
இருப்பினும் ஜெ., வழக்கில் அப்பீலுக்கு செல்ல முதல் உரிமையும் அதிக
உரிமையும் உள்ள கர்நாடக அரசு அப்பீல் செய்ய 90 நாட்கள் கெடு இருக்கும்
நிலையில், ஆச்சார்யா பரிந்துரை செய்த பிறகும் காலம் தாழ்த்தி வருகிறது.
கர்நாடக அரசின் இந்த தாமதத்திற்கு சட்ட காரணங்களை விட அரசியல் காரணங்களே
அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஜெ., வழக்கில் அப்பீலுக்கு சென்றால் கர்நாடக
அரசுக்கு லாபம் இல்லை. செல்லாமல் இருந்தால் தான் காவிரி பிரச்னை, மேகதாது
அணை விவகாரம் உள்ளிட்டவற்றில் லாபம் என கர்நாடக வட்டார தகவல்கள்
கூறுகின்றன. இரு மாநில அரசுகளின் உறவு கெடக்கூடாது என்பதும் இதற்கு முக்கிய
காரணம் என கூறப்படுகிறது.
ஆச்சார்யா நேரடியாக பேட்டி
அளித்து வருவதால் பெயருக்கு வேண்டுமானால் கர்நாடக அரசு அப்பீலுக்கு
போகலாம். ஆனால் அரசு வக்கீலாக ஆச்சார்யா தொடர்வது சந்தேகம் தான் என்கிறது
கர்நாடக பத்திரிக்கையாளர் வட்டம். இந்நிலையில் 2ம் தரப்பான திமுக
அப்பீலுக்கு சென்றால் அது மக்களிடையே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதால் அக்கட்சி கர்நாடகா அரசே அப்பீல் செய்யட்டும் என அடக்கி வாசித்து
வருவதாக கூறப்படுகிறது. இதே நிலைதான் 3ம் தரப்பான சுப்ரமணியசாமிக்கும்.
2016 தேர்தலில் அதிமுக.,வுடன் பா.ஜ., கைகோர்க்க வாய்ப்பு இருப்பதால் கட்சி
தலைமை அவரை கட்டிப் போட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்பீலுக்கான சாத்திய கூறுகள் :
மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடகா அப்பீலுக்கு செல்வதற்கான
வாய்ப்பு குறைவு என்றாலும், அரசியல் நெருக்கடிகளால் அப்பீலுக்கு
செல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.
திருமணத்திற்கு அழைப்பு விடுப்பதாக கூறி திமுக பொருளாளர் ஸ்டாலின், தமிழக
அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். காங்., தலைவர் சோனியாவையும்
சந்தித்து விட்டு வந்துள்ளார். இதே போன்று பா.ம.க.,வும் அப்பீலுக்கு செல்ல
வேண்டும் என கர்நாடக அரசை வலியுறுத்தி வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த
ஜி.கே.மணி, சித்தராமைய்யாவை சந்தித்து நேரடியாக மனு கொடுத்து விட்டு
வந்துள்ளார். அதிமுக.,விற்கு எதிராக மற்ற கட்சிகள் ஒன்று சேர்வதை கர்நாடகா
தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காகவும், காங்., மேலிடம் அழுத்தம்
கொடுக்கும் பட்சத்திலும் அப்பீலுக்கு செல்லும் என்றே கூறப்படுகிறது.
எது
எப்படி இருந்தாலும் மே 21ம் தேதி கர்நாடக அமைச்சரவையில் எடுக்கப்படும்
முடிவை பொருத்தே, மே 22ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில்
ஜெயலலிதாவின் முடிவும் அமையும் என்றே கூறப்படுகிறது. இதனால் அத்தனை
குழப்பங்களுக்கும் மே 21 அன்று தெளிவு கிடைத்து விடும் என
எதிர்பார்க்கலாம்.
Comments