மக்கள் கொடுத்த மரணம் ; பலாத்காரத்திற்கு புதிய வகை தீர்ப்பு ; ஜெயிலில் இருந்து இழுத்து வந்து ஆவேசம்

தினமலர் செய்தி : திம்மாப்பூர்; நாகலாந்து திம்மாபூரில் இளம்பெண்ணை கற்பழித்த இளைஞரை ஊர் மக்கள் அடித்து கயிற்றால் கட்டி தெருத், தெருவாக இழுத்து சென்றனர். அப்போது மக்கள் கொடுத்த தர்ம அடியில் குற்றவாளியின் உயிர் பிரிந்தது. முன்னதாக இந்த குற்றவாளி ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயில் கதவை உடைத்து குற்றவாளியை பொதுமக்கள் பலரும் சேர்ந்து வெளியே இழுத்து வந்தனர். இந்த துணிகரச்சம்பவம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

ஜெயிலை உடைத்து...
:திம்மாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சையீது பரீத்கான் ( 35) . இவர் அருகில் வசித்த 20 வயது இளம் பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரியவர போலீசார் அவனை கடந்த பிப். 24 ம் தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் போலீஸ் நடவடிக்கையில் திருப்தி அடையாத இப்பகுதியினர் திரண்டு சிறைக்கு சென்று அவனை வெளியே இழுத்து வந்தனர். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து நைய புடைத்தனர். இதில் இவரது உடல் முழுவதும் ரத்தம் கொட்டியது. தொடர்ந்து அடித்ததால், அதை தாங்க முடியாமல் குற்றவாளி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

உடலை மீட்ட போலீசார்:

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் கடும் நடவடிக்கையில் இறங்கினர். தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்து, அங்கு கிடந்த குற்றவாளியின் உடலை மீட்டனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இப்பகுதியில் மேலும் மோதல், கலவரம் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments