தினமலர் செய்தி : புதுடில்லி : பாகிஸ்தான் படையினர் இருவரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்று
விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டை வெளியுறவுத் துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் தேசியப்
பாதுகாப்பு ஆலோசகர் சர்தார் அஜீஸ்க்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில்
தெரிவித்துள்ளதாவது:
பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் படையினர் இருவரை
நம்பிக்கைத் துரோகம் செய்து இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றுவிட்டதாக
தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறேன்.ஜம்முவில் கடந்த 31ஆம் தேதியன்று,
பிஎஸ்எப் வீரர்கள் கொடியுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது பாகிஸ்தான்
படையினர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் காயமடைந்தார்.அப்போது, இந்திய வீரர்கள் தங்களை காத்துக்கொள்ள
பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் பாகிஸ்தான் படையினரோ, பீரங்கி
ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.மேலும் பொதுமக்கள் வசிக்கும்
பகுதியில் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் வெள்ளைக்
கொடி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அப்போது இந்திய நிலைகள் மீதான
தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்தினால், இந்தியாவும் உடனடியாக தனது தற்காப்புத்
தாக்குதலை நிறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.துரதிருஷ்டவசமாக இந்த
ஆலோசனையை ஏற்க மறுத்து, பாகிஸ்தான் படையினர் மாலை வரை தாக்குதலில்
ஈடுபட்டனர்.ஆனால் பாகிஸ்தான் தெரிவித்திருப்பதுபோல், படைப்பிரிவுகளுக்கு
இடையே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு எதுவும் இந்தியாவால் விடுக்கப்படவில்லை.
சர்வதேச
எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி ஆகிய இடங்களில் அமைதி
நிலவுவதற்காக வகுக்கப்பட்ட நடைமுறைகளை இந்தியா தொடர்ந்து கடைபிடித்து
வருகிறது. அதேபோல், பாகிஸ்தானியப் படையினரும் அந்த நடைமுறைகளை கடைபிடிப்பதை
நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என சுஷ்மா
குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த 31ஆம்
தேதி பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் படையினர் இருவரை பி.எஸ்.எப்.,
வீரர்கள் சுட்டுக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டி இந்தியாவுக்கு சர்தார்
அஜீஸ் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில் மத்திய
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுத்து அவருக்கு கடிதம்
எழுதினார்.
Comments