நிலக்கரி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ., விசாரணை!

தினமலர் செய்தி : புதுடில்லி: ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை மன்மோகன் சிங்கோ, சி.பி.ஐ., அமைப்போ உறுதி செய்யவில்லை.


நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சிறப்பு அறிக்கையை வரும் 27ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், மன்மோகன் சிங்கை, அவரது இல்லத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மன்மோகன் சிங் வசம், நிலக்கரித்துறை அமைச்சகம் இருந்த போது, ஹிண்டால்கோ நிறுவனத்தின் தலபிரா- இரண்டு பிரிவுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கருத்து கேட்டபோது, சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர் கஞ்சன் பிரசாத் பதிலளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை பற்றியும் தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவர்கள், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது என்பதை மறுத்துள்ளனர்.

ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்க வேண்டும் என தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, கடிதம் எழுதியதை தொடர்ந்து, நிலக்கரித்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Comments