சோதனை செய்யாதீங்க: ராஜபக் ஷே கெஞ்சல்: கண்டுகொள்ளாத இலங்கை அரசு

தினமலர் செய்தி : கொழும்பு: கண்டி நகரில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷே, கெஞ்சும் விதத்தில், அதிபர் சிறிசேன அரசுக்கு விடுத்த கோரிக்கை:நானும், என் குடும்பத்தினரும், 31 ஆண்டுகளாக அரசியலில் உள்ளோம். எங்கள் வீடு எந்த காலத்திலும், யாராலும் சோதனையிடப்பட்டதில்லை.
எனவே, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும், சோதனை நடவடிக்கைகளை, இலங்கை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கேட்டுக் கொண்டார்.எனினும், அவரின் கோரிக்கையை, இலங்கை அரசு கண்டுகொண்டது போல தெரியவில்லை.

ராஜபக் ஷே மகனின் 'லம்போர்கினி' காரை தேடிய போலீஸ்: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவின் பண்ணை வீட்டில், அந்நாட்டு போலீசார் சோதனை நடத்தி, விலை உயர்ந்த, 'லம்போர்கினி' காரை தேடினர்; எனினும், அந்த கார் சிக்கவில்லை.

இலங்கையில், கடந்த 7ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ராஜபக் ஷே, மைத்ரிபாலா சிறிசேனவிடம் பதவியை பறிகொடுத்தார்.அதையடுத்து, ராஜபக் ஷே மற்றும் அவரின் குடும்பத்தினரின் அத்துமீறல்கள், வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து விவரங்களை இலங்கையின் புதிய அரசு ஆராய துவங்கியுள்ளது.கோடிக்கணக்கான விலை மதிப்பிலான, சொகுசு கார்கள் பலவற்றை, ராஜபக் ஷேயும், அவரின் மகன்களும் சொந்தமாக வைத்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களின் வீடுகளை சோதனையிட கோர்ட்டில் அனுமதி பெற்ற போலீசார், தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், ராஜபக் ஷேயின் பண்ணை வீடு ஒன்றில், 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'லம்போர்கினி' கார் உட்பட பல கார்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அங்கு சோதனை நடத்திய போலீசார், சாதாரண படகு ஒன்றை மட்டுமே கைப்பற்றினர்.இதுகுறித்து, ராஜபக் ஷேயின் மகனும், எம்.பி.,யுமான, நமல் கூறும்போது, ''எங்கள் வீடுகள் மட்டுமின்றி, எங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளையும் போலீசார் சோதனையிடுகின்றனர். நாங்கள் வெளியே செல்லவே முடியவில்லை. நாங்கள் யாருடன் தொடர்பு வைத்திருந்தாலும், அவர்கள் போலீசின் அத்துமீறலுக்கு ஆளாகுகின்றனர்,'' என்றார்.

Comments