'நாட்டு விரோத செயலை விட மாட்டேன்' ; கண்ணீருடன் விடை பெற்றார் ராஜபக்சே

தினமலர் செய்தி : கொழும்பு: இலங்கையில் பெரும் சர்வாதிகார இறுமாப்புடன் இருந்த ராஜபக்சே தோல்வியை தழுவினாலும் , இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நபர் என்ற பெயர் என்றும் மாறாது என்றும், இது தொடர்பான அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவரது சுதந்திராகட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ராஜபக்சே, புதிய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்பேன் என்றும் , அதே நேரத்தில் தேச விரோத செயல்கள் நடந்தால் நான் விமர்சிக்கவோ, குரல் கொடுக்கவோ தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசும போது கட்சி அவரது அமைச்சர் சகாக்கள், எம்.பி.,க்கள் கண்ணீர் விட்டனர். பதவி இழந்த பின்னர் நடந்த முதல் கூட்டத்தில் ராஜபக்சே மேற்கண்டவாறு முழங்கினார். தேர்தலில் மொத்தம் பதிவான ஒன்றரை கோடி ஓட்டுக்களில் ராஜபக்சே பெற்ற மொத்த ஓட்டுக்கள் 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 ஓட்டுக்களும் (47.58 சதவீதம் ) , பொது வேட்பாளர் சிறிசேனா பெற்ற மொத்த ஓட்டுக்கள்; 62 லட்சத்து 17 ஆயிரத்து 162 ஓட்டுக்களும் ( 51. 28 சதவீதம் ) .
தோல்வி முழுமையாக கிடைக்க பெற்றதும், ராஜபக்சே தனது அலுவலகத்தில் அமைச்சர் சகாக்கள், மற்றும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். கட்சியின் தலைமை பொறுப்பை நான் விட்டு கொடுக்கப்போவதில்லை. நமது கட்சியினர் எவ்வித வன் செயல்களிலும் ஈடுபடாமல் , சாத்வீகமான முறையில் செயல்பட வேண்டும். புதிய அரசுக்கு அனைத்து வகையிலும் நான் துணை நிற்பேன். ஆனால் அதே நேரத்தில் நாட்டின் தேச விரோத செயல்கள் நடந்தால் விட மாட்டேன். இதில் எனது நிலையை நான் மாற்றி கொள்ள மாட்டேன். இவ்வாறு பேசி முடிக்கும் போது சக நிர்வாகிகள் கண்ணீர் கலங்கினர்.
ரணில் விக்கிரமசிங்கே : கூட்டம் முடிந்து வெளியே வந்த மூத்த நிர்வாகிகள் தோல்வி குறித்து கூறுகையில்; இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ராஜபக்சேவுக்கு உண்டு. இதனை இலங்கை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். என்று கூறினர். நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவும் ஆம் ராஜபக்சேவுக்கு கவுரவம் எப்போதும் இருக்கும் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழர்கள் ஓட்டளிக்கவில்லை : இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்ஷே, அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறி தனது சொந்த ஊரான ஹம்பள் தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அவரை பார்த்த அவரது ஊரை சேர்ந்தவர்கள் கதறி அழுதனர். இதனால் ராஜபக்ஷேவும் கண்ணீர் மல்க காணப்பட்டார்.
பிறகு அவர் தன் ஊர்க்காரர்கள் மத்தியில் பேசியதாவது : வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் எனக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். மலையகத் தமிழர்களும் எனக்கு ஓட்டளிக்கவில்லை. இப்படி தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு ஓட்டளிக்காததால் நான் தோல்வி அடைந்தேன். தமிழர்களால் நான் தோற்கடிக்கபட்டிருக்கிறேன். தமிழர்களின் ஓட்டுக்களால் கிடைத்த இந்த தோல்வியை ஒருபோதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நான் தோல்வியாக கருதவில்லை. நான் அதிபர் தேர்தலில் தோற்றாலும் சிங்களர்களிடம் உள்ள ஆட்சி அதிகாரம் போய்விடவில்லை. எனவே என் தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. இவ்வாறு ராஜபக்ஷே ஆத்திரத்துடன் கூறினார்.

Comments