நடிகர் ஜாக்கி சான் மகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை


தினமலர் செய்தி : பீஜிங் : போதைப் பொருள் வைத்திருந்தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், ஹாலிவுட் குங் பூ சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானின் மகன், ஜெய்சீ சானுக்கு, 32, ஆறு மாத சிறை தண்டனை விதித்து சீன கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஜெய்சீ மற்றும் அவரது நண்பரான தைவான் நாட்டு திரைப்பட நடிகர் கோ சென்-துங் ஆகியோர் மீது, மரிஜூவானா என்ற போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, வழக்கு தொடரப்பட்டது.
மேலும், சீன போலீசார், ஜெய்சீ வீட்டை சோதனையிட்டபோது, 100 கிராம் மரிஜூவானா போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பான வழக்கு, பீஜிங்கில் உள்ள டாங்செங் மாவட்ட மக்கள் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஜாக்கி சான் மகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சீன அரசின் சார்பில், போதை எதிர்ப்பு குழுவின் நல்லெண்ண துாதராக, கடந்த 2009ம் ஆண்டு ஜாக்கி சான் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது மகனே போதைப் பொருள் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றுள்ளது, ஜாக்கி சானுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments