தினமலர் செய்தி : புதுடில்லி: பாகிஸ்தானிலிருந்து வந்த படகு, இந்திய கடற்படையினர்
சுற்றிவளைத்ததும், தானாக தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்திற்கு
லஷ்கர்- இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
படகில் வந்தவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது
உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்கு, குஜராத்தின் எண்ணெய் அல்லது மும்பை ஆழ்கடலில் உள்ள எண்ணெய் தூரப்பன தொழிற்சாலையாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள தொழிற்சாலைகளை தகர்க்கவும் அவர்கள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இம்மாதம் 26ம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா வர உள்ளநிலையில், இந்த விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பாக்., சாதனங்கள்: நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகில் பாகிஸ்தான் கடற்படையினரின் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
4 மாதம் பயிற்சி: படகில் இருந்த பயங்கரவாதிகள் 4 மாதம் பயிற்சி பெற்றுள்ளதை உளவுத்துறையினர் உறுதி செய்துள்ளனர். மேலும் கடந்த டிசம்பர் 20 மற்றும் 26ம்தேதிகளில், கராச்சியிலிருந்து படகில் உள்ள பயங்கரவாதிகள் சிலர் பேசியதை உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்டுள்ளனர். அதில் திட்டமிப்படி செயல்படுங்கள் எனவும், உங்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது எனவும் பேசியுள்ளனர். மேலும் படகில் இருந்த பயங்கரவாதிகள் தங்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தது என கூறியுள்ளதாக பயங்கரவாதிகள் கூறியுள்ளனர்.
படகின் பாகங்கள் தேடல்:தீயில் எரிந்து சாம்பலான அந்த படகின் பாகங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் உடல்களை இந்திய கடற்படையினர் தேடி வருகின்றனர்.
இரண்டு படகுகள் கண்டுபிடிப்பு: குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரை அருகே, சந்தேகப்படும்படியான இரண்டு மீன்பிடி படகுகளை பாதூப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தாக்குதல் குறித்த 10 அம்சங்கள்:குஜராத் கடல் பகுதியில் பாக்.மீன்பிடி கப்பல் பயங்கர வெடிபொருட்களுடன் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற சம்பவத்தில் இந்திய கடலோர காவல்படையினர் இடைமறித்து தாக்கி எரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக நடந்த 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:
1)கடந்த டிசம்பர் 31-ம் தேதி குஜராத்தின் போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து கடல் பகுதியில் 365 கி.மீ. தொலைவில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடைமான வகையில் மீன்பிடி படகு ஒன்றினை இந்திய கடலோரகாவல் படை கண்டறிந்ததையடுத்து, தொழில்நுட்பஉளவுத்துறை வான் வழியாக இடைமறித்தது.2)இடைமறிந்து சோதனை நடத்தியதில் அந்த மர்ம படகு பாகிஸ்தானின் கராச்சியின் கெய்டி பந்தர் பகுதியில் இருந்து அரபிக்கடல் வழியாக வந்தது தெரியவந்துள்ளது.3)இரவு 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையை தாண்டி அத்துமீறி குஜராத் கடல் எல்லையை நெருங்கி வருவதை உளவு விமானம் வழியாக கண்டறிந்தது கடலோரக்காவல்படை அந்த மர்ம படகினை நெருங்கியது.4)இந்தியாவின் ராஜ் ராத்தான் என்ற கடலேரா காவல்படை கப்பல் பாக்.மீன்பிடி படகினை சுற்றி வளைத்து பிடிக்க வருவதையறிந்த மர்ம படகு வேகமாக சென்றது. அந்த மர்ம படகினை நிறுத்துமாறு எச்சரிக்கை விடப்பட்டது.5)தொடர்ந்து அந்த மர்ம படகில் வந்தவர்கள் கடலோர கடலோர காவல்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த துவங்கினர். 6) இந்திய கடலோர காவல்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் படகு தீப்பிடித்து எரியத்தொடங்கியது.7)நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பாக்.மர்மபடகில் வந்த நான்கு பேர் பலியாயினர். 8)நடுக்கடலில் இந்த தாக்குதல் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் முடிவுக்கு வந்தது. படகில் வந்த நான்கு பேரும் பலியானதை இந்திய கடலோர காவல்படையினர் உறுதி செய்தனர். மேலும் பலர் உள்ளனரா என சோதனை நடத்தினர்.9)குஜராத் கடல் பகுதியில் நள்ளிரவில் பல மணி நேரம் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தின் மூலம் இந்தியாவில் பயங்கரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது.10)வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள நிலையில் இந்தியாவில் கடலோரக்காவல் படை உஷார்ப்படுத்திட பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Comments