தினமலர் செய்தி : ஆமதாபாத்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மீன்பிடி
படகு ஒன்று குஜராத் கடல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. சட்ட விரோத
பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வர நடந்த முயற்சியா அல்லது இந்தியாவில்
புத்தாண்டில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் வந்தனரா என்ற கோணத்தில் உயர்
மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு வைத்து தகர்ப்பு : கடந்த 31 ம் தேதி நள்ளிரவில் , குஜராத்
மாநிலம் போர்பந்தர் பகுதியில் இருந்து 365 கி.மீட்டர் தொலைவில் ஒரு பாக்.,
மீன் பிடி படகு வந்தது. இதனை கண்ட கடலோர காவல் படையினர் அருகே சென்றனர்.
இதில் இருந்தவர்கள் சரண் அடையும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து படகை வேகமாக ஒட்டி தப்பிக்க முயன்றனர். தொடர்ந்து
படகை நெருங்குவதற்குள் பாக்., படகு பெரும் வெடி சப்தத்துடன் வெடித்து
சிதறியது. தங்களின் படகை தாங்களே வெடி வைத்து வெடித்துள்ளனர். இந்த படகில் 4
பேர் இருந்ததாகவும், அவர்கள் இறந்து விட்டதாகவும் தெரிகிறது.
கடந்த 2008 ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது மும்பை கடல் பாதை வழியாகத்தான் இவர்கள் வந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இது போல் இந்த சதி திட்டம் தீட்டியே குஜராத் வழியாக வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கராச்சி அருகே கெட்டிபந்தர் என்ற பகுதியில் இருந்து இந்த படகு வந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளே இதில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து புலனாய்வு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments