சுனந்தாவுடன் கருத்து வேறுபாடு இருந்தது; சசிதரூர் வாக்குமூலம்

தினமலர் செய்தி : புதுடில்லி: தனது மனைவி சுனந்தா புஷ்கருடன் கருத்துவேறுபாடு இருந்ததாகவும், அதனை பேசி தீர்த்து கொண்டதாகவும் சசிதரூர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம் தொகுதி, காங்., எம்.பி., சசி தரூரின் மூன்றாவது மனைவி சுனந்தா, கடந்த ஆண்டு ஜன., 17ல் மர்மமான முறையில் இறந்தார் என, தெரிவிக்கப்பட்ட நிலையில், 'அவர் கொலை செய்யப்பட்டார்' என்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் சமீபத்தில் உறுதியானது.
இந்த வழக்கில், தன் உதவியாளர் மூலம் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக சசிதரூர் புகார் கூறியிருந்தார். நேற்று சசிதரூரின் வீட்டு வேலைக்காரர் நாராயணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், சுனந்தா கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், அவரை, சுனில் என்ற நபர் சந்தித்தார். இருவரும், நீண்ட நேரம் தனியாக இருந்தனர். அதற்கு முந்தைய நாட்களில், சசி தரூரும், சுனந்தாவும் பல மணி நேரம் சண்டையிட்டனர் என வாக்குமூலத்தி்ல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுனந்தா கொலை தொடர்பாக சசிதரூர் தனது வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த நாள் இரவு, எங்களுக்குள் சிறிய கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது சுனந்தா குரலை உயர்த்தி பேசினார். பின்னர் பிரச்னையை பேசி தீர்த்து கொண்டோம். இதன் பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் சுனந்தாவை தொடர்பு கொண்ட போது அவர் அமைதியாக இருந்தார். இருவரும் பேசினோம். அவருக்கு நான் காளான் சூப் வாங்கி கொடுத்திருந்தேன். சுனந்தாவுக்கு தூங்குவதில் பிரச்னை உள்ளது. இதனால் அல்ப்ராக்ஸ் மாத்திரை எடுத்து கொள்வார். இரண்டு நாட்களாக அவர் உணவருந்தவில்லை. அவர் இளநீர் மட்டும் வைத்திருந்தார். எனது வேலையை முடித்துவிட்டு ஓட்டல் அறைக்கு திரும்பினேன். சுனந்தா உடல் நலம் குறித்து கேட்டேன். ஆனால் அவர் பதில் எதுவம் கூறவில்லை இதனையடுத்து காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்தேன். அப்போது, சுனந்தாவின் உடல் மற்றும் கைகள் குளிர்ச்சியாக இருந்தன. இதனையடுத்து மற்றவர்களை உதவிக்கு அழைத்தேன். மருத்துவரையும் அழைத்தேன். ஆனால் இது மிகவும் காலதாமதமான நடவடிக்கையாக இருந்தது. இதற்குள் சுனந்தா இறந்துவிட்டார் என கூறினார்.

இதனிடையே,சுனந்தா புஷ்கர், பிரிமியர் கிரிக்கெட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க இருந்ததால் தான் கொலை செய்யப்பட்டார் என்ற பின்னணியில் டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments