இரண்டு முதல் மூன்று மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை: மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

தினமலர் செய்தி : மின்தடையை சமாளிக்க, அனல்மின் நிலையங்களில், உற்பத்தியை அதிகரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக மின் வாரியத்திற்கு, எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை ஆகிய இடங்களில், 4,770 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, அனல்மின் நிலையங்கள் உள்ளன.
தமிழகத்தின் மின் தேவை, நாள்தோறும், 12 ஆயிரம் - 13 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆகாததால், மின்தடை செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த இரு மாதங்களாக, மின் தேவை, 11 ஆயிரம் மெகாவாட்டிற்கு கீழ் சென்றது. ஜனவரி மாதம் வரை, மின் தேவை, இதே அளவில் இருக்கும் என கருதி, அனல்மின் நிலையங்களில், மின் உற்பத்தி அளவை, 2,500 - 2,800 மெகாவாட் என்றளவில், மின் வாரிய அதிகாரிகள் குறைத்தனர். இந்நிலையில், சில தினங்களாக, மீண்டும் மின் தேவை, 11 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது. அதை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆகாததால், நாள்தோறும், 300 - 500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், அறிவிக்கப்படாமல், இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது. எனவே, அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, வடசென்னை, இரண்டு; தூத்துக்குடி, ஒன்று; எண்ணூர், மூன்று என, ஆறு அலகுகளில், பழுது பராமரிப்பு பணிக்காக, 1,200 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. அங்கு ஜன., 10ம் தேதிக்கு மேல் தான், மின் உற்பத்தி துவங்கும். தற்போது ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, அனல்மின் நிலையங்களில், 3,500 மெகாவாட் வரை, மின் உற்பத்தி செய்ய, அங்குள்ள தலைமை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments