நடந்து முடிந்த காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.,) 28 இடங்களிலும், பா.ஜ., 25 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 18 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக பா.ஜ.,வும், பிடிபி.,யும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதில் சரியான முடிவு கிடைக்காத நிலையில், பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி நேற்று கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.,வும் இன்று கவர்னரை சந்திக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தனது முடிவை மாற்றிய பா.ஜ., தலைவர்கள் இன்றே கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கவர்னரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பா.ஜ., தலைவர்கள் கூறியதாவது : ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. மற்ற கட்சிகளுடனும் பேசி வருகிறோம். காஷ்மீரில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே பா.ஜ.,வே விருப்பம். அதனால் ஆட்சி அமைப்பதற்கு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளோம். அதே சமயம் காஷ்மீரில் ஆட்சி அமைக்க நாங்கள் அவசரப்படவில்லை. ஆட்சி எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை இல்லை எனவும், அதனால் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் சில கட்சிகள் தெரிவித்து வருகின்றன. வேறு வாய்ப்பே இல்லை என்றால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நாங்கள் பெரும்பான்மையை பெறுவதற்காக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகையில் ஜனாதிபதி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் காஷ்மீரில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் இன்னும் குழப்ப நிலையே நீடித்து வருகிறது.
Comments