தமிழகத்தின் அரசியல் நிலவரம்....புரட்டிப் போடுமா புத்தாண்டு?

தினமலர் செய்தி : சென்னை : தமிழக அரசியலில் மிகப் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும் ஆண்டாக இந்த புத்தாண்டு பிறந்துள்ளது. பல்வேறு நெருடிக்கடிகள் நிலவி வரும் சூழலில், யாருடைய வாழ்க்கையை, எந்த கட்சியின் எதிர்க்காலத்தை இந்த புத்தாண்டு புரட்டிப் போடப் போகிறது என்ற எதிர்பார்ப்பையும் அரசியல் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.



ஜெ., க்கு ஜே கிடைக்குமா? :

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கர்நாடக ஐகோர்ட் தனி பெஞ்ச் அமைத்து ஜெ., உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவி்டடது. இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் அதற்கான ஆவணங்களை, சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்த கெடுவிற்கு முன்னாபாகவே தாக்கல் செய்துள்ளனர். மிக விரைவில் விசாரணை துவங்க உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து, ஜெ.,யின் வக்கீல்களில் ஒருவரான குமார், ஒரு பேட்டியில் கூறுகையில், 'அடுத்ததாக, இந்த வழக்கை விசாரிக்க கர்நாடகா ஐகோர்ட் தனி பெஞ்ச் ஒன்றை அமைக்கும். ஜனவரி 12ம் தேதி முதல் வழக்கு விசாரணை துவங்கலாம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, விசாரணை தினமும் நடக்கும். வரும் ஏப்ரல் மாதத்தில் விசாரணை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது,' என்றார். இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு சாதகமாக வந்தால் ஜெ.,க்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும். அதேவேளையில், பாதகமாக வரும் பட்சத்தில் அதிமுக.,வில் ஒரு தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கட்சியின் தலைமையிடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும் நிலையும் உருவாகும்.

2ஜி பிடியில் திமுக :

திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோர் மீதான 2ஜி ஸ்பெட்ரம் ஊழல் வழக்கு, கனிமொழி மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு மீதான கலைஞர் டிவி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு ஆகியவை இந்த ஆண்டில் ஒரு முடிவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. 2ஜி வழக்கின் விசாரணை ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.இவ்வழக்குகளின் தீர்ப்பு திமுக.,விற்கு எதிராக இருந்தால், அது திமுக.,வில் மிகப் பெரிய மாற்றத்தையும், தடுமாற்றத்தையும், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

வாய்ப்பை பயன்படுத்துமா பா.ஜ.,? :

தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளாக திகழும் அதிமுக மற்றும் திமுக.,வில் ஏற்படும் தடுமாற்றங்கள், வடஇந்தியாவைத் தொடர்ந்து தென்னிந்தியாவிலும் வலுவான அஸ்திவாரம் அமைக்க தீவிரம் காட்டி வரும் பா.ஜ.,விற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும். சமீபத்தில், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகைக்கு பிறகு 2015ம் ஆண்டிற்குள் பா.ஜ.,வில் 60 லட்சம் உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியில் பா.ஜ., இறங்கி உள்ளது. இதன் மூலம் வலிமையான அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்த முடியும் என பா.ஜ., நம்புகிறது. இதற்கிடையில், பா.ஜ.,வின் கூட்டணியில் இருந்து மதிமுக விலகி விட்டநிலையில் பா.ம.க., தங்கள் தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும் என தெரிவித்து வருகிறது. அதே சமயம் மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிக., தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில், புத்தாண்டில் புதிய பரிமாணம் பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments