அரசு மானியம் வழங்கப்படாததால் மாதத்திற்கு 5,000 ரேஷன் கடைகள் மூடப்படும்

தினமலர் செய்தி : கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசு மானியம் வழங்கப்படாததால், மாதத்திற்கு, 5,000 ரேஷன் கடைகளை மூட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், மொத்தம் உள்ள, 33,973 ரேஷன் கடைகளில், 31,863 கடைகள், 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படுகின்றன.
கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளில், 25 ஆயிரத்திற்கும் அதிகமானவை, வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. கடை வாடகை, ஊழியர் சம்பளம், மின் கட்டணம், போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களை சமாளிக்க, கூட்டுறவு சங்கங்களுக்கு, ஆண்டுதோறும், 250 - 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதில், 120 கோடி ரூபாய், நிதித்துறை மூலம், கூட்டுறவு துறைக்கு, மானியமாக வழங்கப்படும். பின், அந்த நிதி, கூட்டுறவு சங்கங்களுக்கு, தனித்தனியாக பகிர்நது அளிக்கப்படும். ஆனால், கடந்த, மூன்று ஆண்டுகளாக, மானிய தொகை வழங்கப்படாததால், அனைத்து கூட்டுறவு சங்கங்களும், நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால், சம்பளம், வாடகை உள்ளிட்ட செலவினங்களை சமாளிக்க முடியாமல், கூட்டுறவு சங்கங்கள் திணறி வருவதால், ரேஷன் கடைகளை மூட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, நான்கு ஆண்டு களில், கூட்டுறவு துறைக்கு, அரசிடம் இருந்து, 480 கோடி ரூபாய் மானியம் வர வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு பிப்., மாதம், 120 கோடி ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது. மீதி தொகை, இதுவரை வழங்கவில்லை.ரேஷன் கடைக்கு, வாடகை கொடுக்க முடியாததால், கட்டட உரிமையாளர்கள், கடையை காலி செய்யுமாறு கூறுகின்றனர். ஊழியர்களுக்கும், சம்பளம் நிலுவை வைக்கப் பட்டுள்ளது. இதனால், அவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். தற்போது, ஒரே நேரத்தில், அனைத்து ரேஷன் கடைகளையும், மூட வாய்ப்பு இருந்தும், அப்படி செய்ய கூடாது என்பதால், சிரமத்துடன் அவற்றை நடத்தி வருகிறோம். இதே நிலை நீடித்தால், அடுத்த மாதம் முதல், மாதந்தோறும், 5,000 கடைகளை மூட வேண்டிய, இக்கட்டான நிலை ஏற்படும். எனவே, 360 கோடி ரூபாய் மானியம், உடனடி யாக கிடைத்தால், இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


கட்டாய விற்பனை ஏன்?

கூட்டுறவு சங்கங்களின் செலவை சமாளிப்பதற்காக தான், அவற்றின் கீழ் நடத்தப்படும், ரேஷன் கடைகளில், அரிசி, சர்க்கரை வாங்கும் பொதுமக்களிடம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்கள், கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Comments