நீரிழிவு, புற்றுநோய், மாரடைப்பு நோய்களால் 2014ல் இறந்தவர்கள் 1.6 கோடி பேர்

தினமலர் செய்தி : ஜெனிவா: தொற்று நோய்கள் அல்லாமல், வாழும் முறை மாற்றங்களால் ஏற்படும், எளிதில் தவிர்க்கப்படக் கூடிய நோய்களால், கடந்த ஆண்டில், உலகம் முழுவதும், 1.6 கோடி பேர், 70 வயதுக்கு முன்பே இறந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும், 60 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை அந்தந்த நாடுகள் செலவிட்டு, இந்த இறப்பை எளிதில் தடுத்து நிறுத்தலாம் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கமான, உலக சுகாதார அமைப்பு என அழைக்கப்படும், டபிள்யு.எச்.ஓ.,வின் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ளது. அந்த அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் மார்கரெட் சான், கடந்த 19ம் தேதி வெளியிட்ட, சுகாதார அறிக்கை யில், பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவை யாவன:
* 70 வயதில் தான் இயல்பான மரணம் என்ற கணக்கீட்டின் படி, கடந்த ஆண்டில், 1.6 கோடி பேர், 70 வயதுக்கு முன்பே இறந்துள்ளனர். அவர்கள், தொற்றுநோய்கள் அல்லாத, மாரடைப்பு, நுரையீரல் நோய், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற, எளிதில் தடுக்கக் கூடிய நோய்களுக்கு ஆளாகி இறந்துள்ளனர்.
* இதை தடுக்க, நாடுகள் ஒவ்வொன்றும், தங்கள் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும், 60 ரூபாய் முதல், 180 ரூபாய் வரை செலவிட்டு, புதிய திட்டங்களை தீட்டி, இலக்கு நிர்ணயித்து, இந்த நோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை தடுத்து நிறுத்த முடியும்.
* இதற்காக அரசுகள் சில திட்டங்களை, அறிவிப்புகளை வெளியிடலாம். குறிப்பாக, புகையிலை பயன்பாட்டை குறைப்பது, மதுபான பயன்பாட்டை கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமற்ற உணவுகள் அருந்துவதை தடை செய்வது, உடல் உழைப்பில்லாமல் இருப்பவர்களை, தேவையான உடல் உழைப்பை மேற்கொள்ளச் செய்வது, நாடு முழுவதுக்குமான ஆரோக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது போன்றவற்றை பின்பற்றி, முன்கூட்டிய மரணங்களை தடுக்கலாம்.
* இந்த பாதிப்பு, குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் நாடுகளில் தான் அதிகம் உள்ளது. சுகாதார விழிப்புணர்வு இல்லாத மக்கள், அக்கறையில்லாத அரசு, அதற்கான வளங்கள் இல்லாத நாடுகள் போன்றவற்றில் தான் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது.


எவ்வாறு தடுக்கலாம்

*புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களை தடை செய்வது.
* உணவில், 'டிரான்ஸ் பேட்' எனப்படும் கெட்ட கொழுப்புக்குப் பதிலாக, 'பாலி அன்சாச்சுரேடட் பேட்' எனப்படும் கொழுப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
* மதுபான விளம்பரங்களை தடை செய்வது, கட்டுப்படுத்துவது.
* மாரடைப்பு, பக்கவாத நோய்களை கட்டுப்படுத்தும் சிகிச்சை முறைகள் எளிதாக கிடைக்கச் செய்வது.
* குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஊக்கப்படுத்துவது.
* உணவு பழக்கங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
* உடல் உழைப்பின் அவசியத்தை உணரச் செய்வது.
*'செர்விகல் கேன்சர்' எனப்படும் கழுத்து பகுதி புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை தருவது. இந்த முறைகளை பல வளர்ந்த நாடுகள் பின்பற்றி, என்.சி.டி., எனப்படும், தொற்றுநோய் தவிர்த்து பிற நோய்களால் ஏற்படும் இறப்பை தடுத்துள்ளன.
உலக நாடுகளின் நிலைமை:

என்.சி.டி., எனப்படும், தொற்றில்லாத நோய் இறப்பை, 70 வயதுக்கு முன் தவிர்க்க, சில நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. 167 நாடுகளில் அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த, 2013 டிசம்பர் நிலவரப்படி:
* உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை படி, 70 நாடுகளில் முழுமையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
* உடல் உழைப்பு இன்மையை சரி செய்ய, 56 நாடுகள் திட்டமிட்டுள்ளன.
* ஆரோக்கியமற்ற உணவுகளை தடை செய்ய, 60 நாடுகள் முன்வந்துள்ளன.
* புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த, 69 நாடுகள் முன்வந்துள்ளன.
* மதுபானத்தின் கேடுகளை அறிந்து, 66 நாடுகள், அதை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

இந்திய நிலைமை
* மொத்த மக்கள்தொகை - 124 கோடி
* வருவாய் பிரிவு - குறைந்த வருவாய் பிரிவு நாடு
* நகர்புறங்களில் வாழும் மக்கள் - 31.3 சதவீதம்
* 30 - 70 வயதுக்குள் மக்கள் - 40.1 சதவீதம்
* தொற்று நோயில்லாத வகையில் இறப்பு - 60 சதவீதம்
* புற்றுநோய் இறப்பு - 7 சதவீதம்
* இதய நோய் இறப்பு - 26 சதவீதம்
* நீரிழிவு - 2 சதவீதம்
* நுரையீரல் நோய்கள் - 13 சதவீதம்
* தொற்றுநோய் இறப்பு - 28 சதவீதம்
* காயங்களால் இறப்பு - 12 சதவீதம்

70 சதவீதம் பேருக்கு மருத்துவ காப்பீடு 'நோ': இந்தியாவில், 70 சதவீதம் பேருக்கு, மருத்துவ காப்பீடு இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல், ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது.

Comments