“எங்கள் வலியை பாக்.ராணுவத்தினர் உணரவே அவர்கள் குழந்தைகள் மீது தாக்குதல் ” – தாலிபான்கள்

“எங்கள் வலியை பாக்.ராணுவத்தினர் உணரவே அவர்கள் குழந்தைகள் மீது தாக்குதல் ” – தாலிபான்கள் OneIndia News : பெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவரில் தாலிபான்கள் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதலுக்கு அவர்கள் "எங்களுடைய வலியை ராணுவத்தினரும் உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்குள் சில பயங்கரவாதிகள் அதிரடியாக நுழைந்து பள்ளிச் சிறார்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள், ராணுவ வீரர் உட்பட 120க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான்கள் பொறுப்பேற்பதாகவும் அறிவித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து கூறியுள்ள தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகள், "நாங்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம். ராணுவத்தினர் ஒவ்வொரு முறையும் எங்களுடைய குடும்பத்தினைரை கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கினார்கள். அந்த வலியை அவர்களும் உணர வேண்டும் என்றுதான் அவர்களின் குழந்தைகளும் படிக்கும் பள்ளியின் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கஃபே ஒன்றில் நேற்று பயங்கரவாதிகள் அங்கிருந்த பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த சம்பவம் அடங்குவதற்குள் இன்று பாகிஸ்தானில் அதே போன்றதொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments