தினமலர் செய்தி : சென்னை: 'ஆவின் பால் கலப்பட விவகாரத்தில், நேர்மையான விசாரணை நடத்தி,
உண்மைகளை வெளிப்படுத்தவும், மோசடி பேர்வழிகளின் சொத்துகளை பறிமுதல்
செய்யவும், சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஆவின் பால் முறைகேட்டில் உள்ள பல்வேறு தவறுகளை சுட்டிக் காட்டி, இது
குறித்து, மக்கள் முழுமையாக தெரிந்து கொள்ள, வெள்ளை அறிக்கை வெளியிட
வேண்டும் என்று கேட்டால், என் மீது அவதூறு வழக்கு போடப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அரசின் செயல்பாடுகளில் உள்ள
குறைகளையும், மக்கள் பிரச்னைகளையும் நான் சுட்டிக் காட்டவே கூடாது என்பது,
ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது.
நெருங்கிய உறவினர்:
பாலில்
தண்ணீர், அந்த கலப்பட பாலை, ஆவின் நிறுவனத்திற்கு வழங்கிய,
அ.தி.மு.க.,வின் மோசடி பேர்வழி வைத்தியநாதன், அவரது மனைவி மற்றும்
நெருங்கிய உறவினர்கள், மிக குறுகிய காலத்தில் மிகப் பெரிய பணக்காரர்களாக
மாறியுள்ளனர். பாலில் கலப்படம் செய்ததன் மூலம் சம்பாதித்த பணத்தில் தான்,
இந்த வளர்ச்சியை அவர்கள் அடைந்துள்ளனர் என, மக்கள் சொல்கின்றனர்.
இவ்வழக்கில், வைத்தியநாதனின் மனைவி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், இதுநாள் வரையிலும், போலீசாரால் அவர் கைது செய்யப்படவில்லை. அவர்
முன்ஜாமின் பெற்று கொள்வதற்கு ஏதுவாக, காவல் துறை மெத்தனமாக உள்ளதோ என்ற
ஐயம், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி
ஆகியோரின் நெருங்கிய உறவினர்களிடமும், இதுநாள் வரையிலும், ஏன் விசாரணை
நடத்தப்படவில்லை? மூன்று ஆண்டுகளில் இவர்கள் வாங்கி குவித்த சொத்துகளைப்
பற்றி விசாரித்தால் தான், இதில் உள்ள உண்மைகள் வெளிவரும். இதில், அரசு
அதிகாரிகள் முதல், ஆளுங்கட்சி பிரமுகர்கள் வரை, பலருக்கும் தொடர்பு
இருப்பதாகவும், அதனால் தான், வழக்கு ஆமை வேகத்தில் செல்வதாகவும், சமூக
ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நேர்மையான விசாரணை:
எனவே, நேர்மையான விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிப்படுத்தவும், மோசடி பேர்வழிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், சி.பி.ஐ., விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அதேபோல, பால் உற்பத்தியாளர்களுக்கு, கொள்முதல் விலையை உயர்த்தி கொடுப்பதில், தே.மு.தி.க.,விற்கு மாற்று கருத்து கிடையாது. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையாக, லிட்டருக்கு, 5 ரூபாய் மட்டும் உயர்த்தி விட்டு, பொதுமக்களுக்கு 10 ரூபாய் உயர்த்தி, பால் விற்பனை செய்யப்படுகிறது. அரசின் இச்செயல், கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்தது போல உள்ளது. பால் உற்பத்தியாளர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி, மாற்றம் தந்த மக்களுக்கு ஏமாற்றம் தந்த அரசாக, இந்த அரசு செயல்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Comments