டில்லி போலீசாருக்கு நெருக்கடி: அஜீத் தோவல் பாய்ச்சல்

தினமலர் செய்தி : புதுடில்லி: டில்லியில், 'கால் டாக்சி'யில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், டில்லி போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இது தொடர்பாக டில்லி போலீசாரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

தலைநகர் டில்லியில், சமீபத்தில், 'உபெர்' நிறுவனத்தின் கால் டாக்சியில் சென்ற இளம்பெண், அதன் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்ட்டிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதையடுத்து, பாலியல் பாலத்காரத்தில் ஈடுபட்ட டிரைவர் கைது செய்யப்பட்டார். விதிமுறைகளை மீறி செயல்பட்ட உபெர் நிறுவனத்தின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், டில்லியில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, டில்லி போலீஸ் கமிஷனர் பாஸ்ஸிக்கு, அஜீத் தோவல் உத்தரவிட்டுள்ளார்.தற்போது, சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்டில் முகாமிட்டுள்ளதால், அவர் டில்லி திரும்பியதும், அவருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்த அஜீத் தோவல் முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்காரி, உபெர் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

'அவர் கூறுகையில், ''இதுபோன்ற தடைகளால் குற்றங்களை தடுக்க முடியாது; இந்த தடையால் மக்கள் தான் பாதிக்கப்படுவர். நாளைக்கு, அரசு பஸ்சில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடத்தால், அடுத்த நாளே, அரசு பஸ் சேவைக்கு தடை விதிக்க முடியுமா? எனவே, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அவசியம்,'' என்றார்.

என்ன நடவடிக்கை?

டில்லி போலீஸ் கமிஷனர் பாஸ்ஸி கூறியதாவது: தங்களிடம் பணியாற்றும் டிரைவர்களின் நடத்தை சான்றிதழை போலீசாரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென, அனைத்து கால் டாக்சி நிறுவனங்களுக்கும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டாக்சி டிரைவர் குறித்து, 'உபெர்' நிறுவனம் போலியான நடத்தை சான்றிதழ் சமர்ப்பித்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அமெரிக்காவிலும் சிக்கல், அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும், 'உபெர்' கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகர நிர்வாகமும், 'உபெர்' நிறுவனத்துக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த நகரத்தின் மேயர் சார்லி ஹால்ஸ் கூறுகையில், ''நகர மக்களின் பாதுகாப்பும், சுகாதாரமும் தான் எங்களுக்கு முக்கியம். இந்த விஷயங் களை மையமாக வைத்து, விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம். 'உபெர்' நிறுவனம், எங்கள் விதிமுறைகளை ஏற்காமலேயே, இங்கு போக்குவரத்தை துவக்கியுள்ளது. இதனால், அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளோம்,'' என்றார்.

Comments