நெஞ்சுக்குள் நுழைந்தாய் மூச்சினில் நிறைந்தாய்...: கிளார்க் இரங்கல்

Michael Clarke, Hughes Funeral
தினமலர் செய்தி : மேக்ஸ்விலி: பிலிப் ஹியுஸ் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். தனது ஒவ்வொரு அசைவிலும் ஹியுசை பார்ப்பதாக கூறினார்.             
கண்ணீர்மல்க இவர் பேசியது : ஹியுஸ்... நீ எங்கிருக்கிறாய் என்று தெரியவில்லை. இருந்தாலும், உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். இது பைத்தியகாரத்தனமானது என நன்கு தெரியும். இருப்பினும், உன்னிடம் இருந்து எப்படியாவது ஒரு போன் வராதா என, ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.        

             
நிலைத்து நிற்கும்: வெறும் 25 வயதில் கிரிக்கெட்டில் இருந்தும், உன்னை நேசித்தவர்களிடம் இருந்தும் விடை பெற்றுவிட்டாய். இந்த உலகத்தின் ஏதாவது ஒரு இடத்தில், உன் முகத்தை பார்த்து விட முடியாதா என்று துடித்துக் கொண்டுள்ளேன். இதைத்தான் ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய உணர்வு என்று அழைப்பார்களோ?                  

இது உண்மையென்றால், ஹியுஸ் ஆன்மா என்றும் என்னுடன் நிலைத்து நிற்கும். எப்போதும் இது என்னை விட்டு நீங்காது என்று நம்புகிறேன்.    
               
அலைமோதிய நினைவுகள்: கடந்த வாரம் ஹியுஸ் மரணம் அடைந்த அன்று (நவ., 27) இரவு, சிட்னி மைதானத்தின் நடுவில் புல்வெளியில் நடந்து சென்றேன். ஹியுஸ், நான் மற்றும் சக வீரர்கள் இணைந்து விளையாடிய நாட்கள் வந்து மோதின.                   

ஹியுசின் ரன் மழையை பார்த்து, பாராட்டிய ரசிகர்கள் கூட்டம், மீண்டும், மீண்டும் அவர் பவுண்டரி அடித்த எல்லைக் கோடுகளை பார்த்தேன்.  
                 
ஹியுஸ் ‘அட்வைஸ்’: அந்த புல்வெளி மைதானத்தில் மண்டியிட்டு குனிந்த போது, ‘ஹியுஸ் என்னுடன் தான் உள்ளார்’ என, அழுத்தமாக சொல்வது போல இருந்தது. ‘தேநீர் இடைவேளை வரை நாம் களத்தில் நிற்க வேண்டும், நீங்கள் மோசமான ‘ஷாட்’ அடிக்கிறீர்கள்,’ என்று ஹியுஸ் கூறியது மனதில் அலை பாய்ந்தது.                   

உடனடியாக எனது கால்களை அசைத்து, எல்லாம் சரியாகத் தான் உள்ளதா என்று சோதித்துக் கொண்டேன். கடைசியில் ஹியுசின் ஆன்மா, இந்த சிட்னி மைதானத்திலேயே நிசப்தமானது.                   

புனிதமான சிட்னி: இனி வரும் காலத்தில், இந்த மைதானம் எனக்கு புனிதமானதாக இருக்கும். ஹியுசின் இதயம் முழுவதும் கிரிக்கெட் தான் நிறைந்திருந்தது. கிரிக்கெட்டுக்காக மட்டும் வாழ்ந்த அவரது ஆன்மா, அனைவரது நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும்.                   

ஒருங்கிணைத்த கிரிக்கெட்: ஹியுசின் உண்மையான விளையாட்டு ஆர்வம் தான் எங்களை ஒருங்கிணைத்தது. கராச்சியில் உள்ள ஒரு சிறுமி, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்துகிறாள். கிரிக்கெட் உலகின் ‘ஜாம்பவான்கள்’ சச்சின், லாரா, வார்ன் தங்கள் வேதனைகளை தெரிவித்தனர். இதனை தான் கிரிக்கெட் உணர்வு என்று சொல்கிறார்களா? ஹியுசின் இந்த உணர்வு, கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு அங்கமாக இருக்கும். நாம் நேசிக்கும் இந்த விளையாட்டின் பாதுகாவலனாக இருக்கும். இதைப் புரிந்து கொண்டு பாடம் கற்க வேண்டும். சின்ன தம்பியே உன் ஆன்மா சாந்தியடையட்டும்.             
இவ்வாறு கிளார்க் கூறினார்.

Comments