தேசியத்தை பின்பற்றாத அமைப்புகளுக்கு ஆப்பு: தமிழக பா.ஜ.,வை பலப்படுத்த அமித் ஷா திட்டம்

தினமலர் செய்தி : தனி ஈழ ஆதரவுக்காக, தேசியத்தை பின்பற்றாமல் செயல்படும் தமிழக அமைப்புகளை, மக்களிடம் இருந்து முழுமையாக ஓரங்கட்டி, தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த, 'பலே' திட்டங்களுடன் விரைவில் தமிழகம் வருகிறார், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா.

அரசியல் களத்தைப் பொறுத்த வரையில், தேசியத்தை பின்பற்றுகிறவர்கள், பின்பற்றாதவர்கள் என, இரண்டு தரப்பினர் உள்ளனர். அவர்களில், தேசியத்தை பின்பற்றும் அவ்வளவு பேரையும் பா.ஜ., பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சியில், அக்கட்சி இறங்கி உள்ளது. எதிர்ப்பாளர்களை பயங்கரவாதிகள் என, முத்திரைக் குத்தி, மக்களிடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது.



கொந்தளிப்பான நிலை...:

இதன் ஒரு அங்கம் தான், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் வைகோவை, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற்றும் முயற்சி.இலங்கைத் தமிழர் பிரச்னையை மையமாக வைத்து, 'மானங்கெட்ட மத்திய அரசு' என, மோடி அரசை வைகோ கடுமையாக விமர்சித்ததும், அவருக்கு எதிராக தமிழக பா.ஜ.,விலும், தேசிய அளவிலும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டிருக்கிறது.பால் விலை உயர்வுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து, வைகோ போராட்டம் நடத்தினார். அப்போது தான், அவர் மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.,வின் முன்னாள் தேசிய செயலர், கல்யாண ராமன், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில், வைகோவை கடுமையாக விமர்சித்தார்.
திட்டமிட்டு நடந்தவை:

அப்போதே, தேசியத்துக்கு எதிராக, பயங்கரவாத பாதையில் பயணிப்பவர்களை தொடர்ந்து வைகோ ஆதரித்து வருவது, அவரின் அரசியல் எதிர்காலத்தை பாழடிக்கும் என்றெல்லாம் சொன்னவர், அடுத்தடுத்த கட்டங்களில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் கடுமையாக விமர்சித்தார். பிரபாகரனை, 'தேசத் துரோகி, இனத் துரோகி' என்றும் சாடினார்.இதன் அடுத்த கட்டமாக, தற்போதைய தேசிய செயலர் எச்.ராஜாவும் வைகோவுக்கு எதிராக, கிளம்பியிருக்கிறார்.'மோடியை விமர்சிக்கும் வைகோவுக்கு, நாவடக்கம் தேவை. அவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தால், ஒழுங்காக வீடு போய் சேர முடியாது' என்று ராஜா, வைகோவை எச்சரித்தார்.'பா.ஜ., கூட்டணியில் இருந்து, வைகோ வெளியேற வேண்டும்' என்று சொல்லி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பிரச்னையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டார்.'இதெல்லாமே தன்னிச்சையாக நடந்தவை அல்ல; திட்டமிட்டு நடந்தவை தான்' என்று, பா.ஜ.,வின் செயல் திட்டங்கள் குறித்து, கூறினார் கல்யாண ராமன்.
இலங்கை பிரச்னைக்கு தீர்வு:

அவர் மேலும் கூறியதாவது:பா.ஜ.,வைப் பொறுத்த வரையில், தெளிவாக முடிவெடுத்து விட்டோம். இனி, வைகோ கூட்டணிக்கு தேவை இல்லை.இதில் தேசிய தலைமைக்கும் உடன்பாடு உண்டு. அதனால் தான், கட்சியின் குரலாக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும், களமிறங்கி கருத்து பரிமாறுகிறார்.இந்தப் பிரச்னை, இத்தோடு முடிந்து விடாது. வரும், 19ம் தேதி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை வருகிறார். அவர் தமிழகத்தில், இரண்டு நாட்கள் தங்குவார்.அப்போது அவர், தமிழக பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள் அவ்வளவு பேரையும் சந்தித்து பேசுகிறார். பா.ஜ.,வின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், அப்போது அவர் பேசுவார்.தேசியத்தின் வழியில் செயல்படுகிறவர்கள், செயல்படாதவர்கள் என, அரசியலை இரண்டாக பிரித்து, தேசியத்தின் வழி செல்பவர்களை பா.ஜ., பக்கம் கொண்டு வருவது தான், பா.ஜ.,வின் இலக்கு எனவும் சொல்வார்.தேசியம் பேசும் பா.ஜ., மாநில நலன்கள் - உரிமைகள் காக்க, எல்லா முயற்சிகளையும் எடுக்கும். மொழிகள் போற்றப்படும்; இலக்கியம் பாதுகாக்கப்படும்; இலக்கிய அறிஞர்கள் புகழப்படுவார்கள்; இனம் காக்கப்படும் என்றும் சொல்வார்.அந்த வகையில் தான், தமிழ் அறிஞர் திருவள்ளுவரை போற்றும் விதமாக, ஜன., 15 அன்று, நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படும் என, மத்திய அரசு, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.தொடர்ந்து பல அறிவிப்புகள் வெளியிடப்படும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்.அதன் முதல்கட்டம் தான், இலங்கையில் துாக்கு தண்டனையில் சிக்கிய, ஐந்து மீனவர்கள் மீட்டெடுக்கப்பட்டது. விரைவில், மீனவர்களின் படகுகளும் மீட்கப்படும். கச்சத் தீவு பிரச்னைக்கும் தீர்வு ஏற்படுத்தப்படும்.ஏற்கனவே தமிழகத்தில், அ.தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - தி.மு.க., போன்ற தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்தும் தேசிய சிந்தனையில் இருந்து விலகி நிற்பதைச் சொல்லி, ஓரங்கட்ட, அமித் ஷா திட்டம் வைத்து உள்ளார்.

அதேநேரம், காங்கிரஸ், தேசிய சிந்தனையில் தான் செயல்படுகிறது. ஆனால், அதை வைத்து கட்சியை பலப்படுத்த அவர்களிடம் திட்டங்கள் இல்லை.இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி, தேசிய சிந்தனையுள்ளவர்கள் அனைவரையும், பா.ஜ.,வில் ஒருங்கிணைப்பதற்கான, செயல்வடிவம் தான், தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகள்.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments