கறுப்புப் பணம் பற்றிய திடுக் தகவல்கள்: சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை

தினமலர் செய்தி : புதுடில்லி : வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் பற்றிய திடுக்கிடும் தகவல்களை, சிறப்பு புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது. இதில், சுவிஸ் வங்கியில், 4,000 கோடி ரூபாயும், இந்தியாவில், 15 ஆயிரம் கோடி ரூபாயும் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய, 628 பேர் பட்டியலை மத்திய அரசு சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த பட்டியல், சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், இப்படியலில் இடம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் அவர்களின் வருமானம், சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்த விவரங்களை சேகரித்தனர். இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு, நேற்று ஓர் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், சுவிஸ் வங்கியில், இந்தியர்களின் பணம் 4,479 கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில், கணக்கில் காட்டப்படாத, 14 ஆயிரத்து 958 கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கறுப்புப் பணத்தை பதுக்கியவர்களின் விவரங்களை சேகரித்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விரைவில், அந்த நபர்களிடம், நேரடி விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments