அரசியல்வாதியின் மகனாக இருந்தால் இப்படி செய்வார்களா?

தினமலர் செய்தி : ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதலால் உயிரிழந்த 14 சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உடைகள் குப்பையில் எறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 வீரர்கள் காயமடைந்தனர்.
பணியின் நிமித்தமாக காட்டுக்குள் சென்று திரும்பிய போது நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கு வீரர்கள் ஆளானார்கள். இந்நிலையில், பலியான 14 வீரர்களின் உடல்களும் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அப்போது அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் உடமைகளை, பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், குப்பையில் வீசியதாக தெரிகிறது. பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு அவரது உடை மிகவும் மதிப்பு வாய்ந்தது. இந்நிலையில், நக்சலைட்டுகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 14 வீரர்களின் உடைகள் குப்பையில் வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மரணம் அடைந்த வீரர் குல்தீப் என்பவரது தந்தை தரம்பால் புனியா கூறுகையில், நக்சலைட்டுகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடைகளுக்கு அரசு தரும் மரியாதை இது தானா என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெறும் நிவாரண தொகை அனைத்தையும் ஈடுகட்டி விடாது. நாங்கள் எங்கள் மகனை இழந்துள்ளோம். ஆனால் அவரது உடைகளை அரசு குப்பையில் வீசியுள்ளது. இதே ஒரு அரசியல்வாதியின் மகனாக இருந்தால், இவ்வாறு செய்திருப்பார்களா என வேதனையுடன் தெரிவித்தார்.


விசாரணைக்கு உத்தரவு:

சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Comments