அரிசி ஆலைகளுடன் வாணிப கழக அதிகாரிகள் கூட்டு? : ரேஷனில் தொடரும் தரமற்ற அரிசி வினியோகம்

தினமலர் செய்தி : தனியார் அரிசி ஆலைகளுடன், வாணிபக் கழக அதிகாரிகள் கூட்டு வைத்து செயல்படுவதால், ரேஷன் கடைகளில், தொடர்ந்து தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுகிறது.

மத்திய அரசின், பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், இந்திய உணவுக் கழகம் சார்பில், தமிழகத்தில், விவசாயிகளிடம் இருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நெல் கொள்முதல் செய்கிறது.
ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய, மாதம் ஒன்றுக்கு, 3.20 லட்சம் டன் அரிசி தேவை. தமிழகத்தில், நெல் விளைச்சல் குறைவாக உள்ளதால், ஆந்திரா, அரியானா, சத்தீஸ்கரில் உள்ள, இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இருந்து, தமிழகத்திற்கு, சரக்கு ரயில்கள் மூலம், அரிசி கொண்டு வரப்படுகிறது.

இந்த அரிசியை, வாணிபக் கழக அதிகாரி கள், 50 மூட்டைக்கு ஒரு மூட்டை என்ற அடிப்படையில், சோதனை செய்த பின், கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.அங்கு, 50 கிலோ மூட்டை என்ற அளவில், ஒரே சீராக எடை போட்டு, ரேஷன் கடைக்கு நகர்வு செய்ய வேண்டும்.ஆனால், வாணிபக் கழக அதிகாரிகள், பிற மாநிலங்களில் இருந்து வரும் அரிசியை, சோதனை செய்வது கிடையாது.

இதனால், மற்ற மாநில அரசுகளால், சோதனை செய்யப்பட்டு, 'தரமற்றது' என, ஒதுக்கப்பட்ட அரிசி, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, நகர்வு செய்யப்படுகிறது.இந்த தரமற்ற அரிசியை, ரேஷனில் வினியோகம் செய்யும் போது, பொதுமக்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால், கடை ஊழியர்கள், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதுடன், பயன்டுத்த முடியாமல் உள்ள அரிசியை, கீழே கொட்டி பாழாக்கி வருகின்றனர்.இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:தமிழகத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல், வாணிபக் கழகம், 23; தனியார், 450 என, மொத்தம், 473 அரிசி அரவை ஆலைகளில் கொடுத்து, அரிசியாக மாற்றப்படுகிறது.தனியார் ஆலைகளில், அரவைக்காக நெல் வழங்கும் போது, ஆலை உரிமையாளர்கள், அந்த நெல்லை அரைத்து வழங்க வேண்டிய அரிசிக்கு பதில், தங்களிடம் ஏற்கனவே உள்ள, தரமற்ற அரிசியை வழங்குகின்றனர்.வாணிபக் கழக அதிகாரிகள், ஆலை உரிமையாளர்களுடன் கூட்டு வைத்து, அரிசியின் தரத்தை சோதனை செய்யாமல் வாங்கி வருவ தால், ரேஷனுக்கு தரமற்ற அரிசி வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments