காசு... பணம்... துட்டு...: கண்ணீர் வடிக்கும் போக்குவரத்து கழக ஊழியர்கள்

தினமலர் செய்தி : விடுமுறை தினத்தில், சம்பளத்தை பிடிக்காமல் இருக்க பணம்; கூடுதலாக பணி செய்ய விரும்பினாலும் பணம்; 'ஏசி' பஸ்களை இயக்க வேண்டுமானாலும் பணம் என, பஸ் ஓட்டுனர்களிடம், பல வழிகளில் உயரதிகாரிகள் கறப்பதால், அவர்கள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஓட்டுனர்கள் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு பணிமனையிலும், 'கன்ட்ரோலர்' பொறுப்பில் உள்ளவர்களே, ஓட்டுனர், நடத்துனர்களுக்கான தினசரி பணியை முடிவு செய்கின்றனர்.
*விடுமுறை தினத்தில், பணியின்றி ஓய்வு எடுத்துக் கொண்டால், அன்றைய தினத்திற்கான சம்பளத்தை பிடித்தம் செய்வதாக, 'கன்ட்ரோலர்' கூறுகின்றனர். இதை சரி செய்ய, 200 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.
*ஒரே நாளில், இரண்டு 'ஷிப்ட்'டில் பணி புரிந்தால், மறுதினம் எங்களுக்கு விடுமுறை. அன்றைய தினம் பணிபுரிய விரும்பினால், 300 ரூபாய் தர வேண்டியுள்ளது.
*ஒரே வழித்தடத்தில் தொடர்ந்து பஸ்சை இயக்கவும், 'ஏசி' பஸ்களை இயக்கவும், பல ஆயிரம் ரூபாய் தர வேண்டும்.
*சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின், அண்ணா நகர் பணிமனையில், வசூல் வேட்டை அதிகரித்து உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


பரவலாக உள்ள பிரச்னை:

ஊழியர்களிடம் பணம் வசூலிக்கும் பழக்கம், அனைத்து பணிமனைகளிலும்பரவலாக உள்ளது. இதை தடுத்து நிறுத்தும்படி, நிர்வாகத்திடம் பலமுறைவற்புறுத்தி விட்டோம். ஆர்ப்பாட்டங்கள்நடத்தி விட்டோம். இருந்தும்பிரச்னை நீடிக்கிறது.
நடராஜன்
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை
பொருளாளர்

ரூ.300 கேட்கின்றனர்:
 
இந்த பிரச்னை, 10 ஆண்டுகளாக உள்ளது.துவக்கத்தில், 50 - 100 ரூபாய் வசூலித்த போது, ஊழியர்களுக்கு பெரிய பாதிப்பாக தெரியவில்லை. தற்போது, 300 ரூபாய்க்கு மேல் கேட்கின்றனர். பணிமனைகளில் உள்ள கிளை மேலாளர்கள், பஸ் இயக்கத்தில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதில் மட்டுமே, கவனமாக உள்ளனர்.
ஆறுமுக நயினார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள்
சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) பொதுச் செயலர்

Comments