தினமலர் செய்தி : ''மோடியை கடுமையாக விமர்சிக்கும் வைகோ, பா.ஜ., கூட்டணியில் இருந்து
வெளியேறுமாறு நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை; விடுதலைப் புலிகள்
ஏஜன்டாக இருக்கும் அவர், தன்னுடைய நாவை அடக்கிக் கொள்ள வேண்டும்;
இல்லையென்றால், விளைவுகள் மோசமாக இருக்கும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்
சுப்பிரமணியன் சாமி, பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி:முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற விடுதலைப் புலிகளை, நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன்; அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டேன். இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளை என்றைக்கும் ஏற்க முடியாது.
அவநம்பிக்கை:
தீவிரவாத
அமைப்பு என தெரிந்தும் வைகோ, அவர்களுக்கு ஆதரவாக பேசி வருவது, தேசியத்தின்
மீது அவர் வைத்திருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை, இந்த நாடே
அறியும்.அவர் மத்திய அரசு, தன் விருப்பப்படி நடக்கவில்லை என்பதற்காக,
மோடியை விமர்சிக்கிறார். அதனால்தான், வைகோவை கூட்டணி யில் இருந்து
வெளியேறும்படி கேட்டுக் கொண்டேன்.அதைத் தொடர்ந்து, பா.ஜ., தேசிய செயலர்
ராஜாவும் இதே கருத்தைச் சொன்னார். வைகோவுக்கு நாவடக்கம் தேவை என்றும்
சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு என, புரியவில்லை.இதற்காக, அவரது
வீட்டை, ம.தி.மு.க.,வினர் முற்றுகையிட முயன்றுள்ளனர். தமிழகத்தில், எனக்கோ,
என்னை சார்ந்தவர்களுக்கோ, சிறு பிரச்னை கூட இருக்கக்கூடாது என, உச்ச
நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கி உள்ள நிபந்தனை
ஜாமினில் தெரிவித்துள்ளது.அதனால் தான், இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியான
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜெயலலிதாவின் ஜாமினை ரத்து செய்ய மனு
போடுவேன் என சொன்னேன். இதை முழுமையாக அறியாமல், உச்ச நீதிமன்றம் என்ன
சுப்பிர மணியன் சாமி வீட்டு சொத்தா என, வைகோ கேட்டிருக்கிறார்.
இப்படித்தான், அரைவேக்காட்டுத்தனத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
புலி ஏஜன்ட்:
அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகளை எதிர்ப்பதால், டபுள் ஏஜன்ட் என, புலம்பியிருக்கிறார். டபுள் ஏஜன்ட் யாருக்கு என சொல்லவில்லை. அவர் தான், விடுதலைப் புலிகள் ஏஜன்டாக செயல்படுகிறார். தொடர்ந்து, அவர் இப்படியே செயல்பட்டால், அவரது இயக்கத்தையும் தடை செய்யும் முயற்சியில் இறங்குவேன். மீனவர்களுக்கு யார் நன்மைகள் செய்தது என்பது, மீனவ மக்களுக்குத் தெரியும். இப்படியெல்லாம் வீண் சவடால் விடும் வைகோ, தன் முயற்சியால், இலங்கையில் சிக்கிக் கொள்ளும் மீனவர்களையும், மீனவப் படகுகளையும் மீட்டுக் கொண்டு வரலாமே! அதையெல்லாம் செய்ய முடியாதவர், செய்கிறவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
Comments