புதுச்சேரி முழுவதும் பந்த்; வீதிகள் வெறிச் ; சட்டசபைக்குள் புகுந்த காங்., இளைஞர்கள்

தினமலர் செய்தி : புதுச்சேரி : புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்த பெண்கள் வெளியேற்றப் பட்டதால் மன விரக்தியில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமான ஆசிரம நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரமத்தை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் இன்று ஒருநாள் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் முக்கிய வீதிகள் வெறிச்சோடியது. இளைஞர் காங்கிரசார் சட்டசபைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி பெண்கள் 5 பேர் தங்கி, இருந்தனர். இவர்கள் ஆசிரமம் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதனால் அவர்கள் ஆசிரம விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து 5 பேரும் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிட்டனர். ஆசிரம நிர்வாகத்தின் உத்தரவின்படி நடக்க வேண்டும் எனவும், 6 மாதத்திற்குள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. 5 பேரும் அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனால் விரக்தி அடைந்த இந்த குடும்பத்தினர் பெற்றோர் உள்பட 7 பேரும் காலாபட்டு கடற்கரை பகுதிக்கு சென்று அங்கே கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ராஜ்யஸ்ரீ. அருணாஸ்ரீ, சந்திராதேவி ஆகிய 3 பேர் கடலுக்குள் மூழ்கி இறந்து போயினர். மீதமுள்ள நான்கு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு பஸ்கள் மட்டுமே ஓடுகிறது : இந்நிலையில் இன்று பந்த் நடக்கிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பந்த்துக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், பா.ம.க., விடுதலை சிறுத்தை, மற்றும் தமிழ் ஆதரவு அமைப்பினர் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் மட்டுமே ஓடுகிறது. தனியார் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. ஆங்காங்கே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Comments