ராஜா பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன், பாஜக கூட்டணியிலிருந்து வைகோ விலகலாம்... கருணாநிதி

 ராஜா பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன், பாஜக கூட்டணியிலிருந்து வைகோ விலகலாம்... கருணாநிதிTamil.Oneindia செய்தி : சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மிரட்டும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரது பேச்சால் பாஜக கூட்டணியிலிருந்து வைகோ விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். வைகோவை ராஜா மிரட்டியதைக் கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் கூட கண்டித்திருந்தார்.

இருப்பினும் திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மட்டும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்காமல் இருந்தனர். நேற்று ராமதாஸ் தனது அறிக்கையில் ராஜா பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று கருணாநிதி தனி அறிக்கை மூலம் ராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த வாரம் நேபாள நாட்டில் சார்க் மாநாடு நடைபெற்றபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் சந்தித்துக் கொண்ட நேரத்தில், இலங்கையில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தமிழர்கள் பலரின் படுகொலைக்குக் காரணமான ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற நம்முடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்ததற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தார்கள். அப்போது மதிமுகவின் பொதுச் செயலாளர், வைகோ, பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார், எந்த இந்தியப் பிரதமரும் இவ்வாறு நடந்து கொண்டதில்லை என்ற பொருள்பட கருத்து தெரிவித்ததற்கு, பாஜக வின் மற்ற தலைவர்கள் எல்லாம் பொறுமையாக இருந்த போதிலும், தேசிய செயலாளர் எச். ராஜா, அவருக்கே உரிய பாணியில், மேலும் கடுமையாக வைகோ இவ்வாறு ஒருமையில் பா.ஜ.க. தலைவர்களைப் பேசுவதை நிறுத்தாவிட்டால், அவர் நாவை அடக்கா விட்டால், தமிழ்நாட்டில் நடமாட முடியாது, பாதுகாப்பாகத் திரும்ப முடியாது என்றெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிலளித்திருப்பதற்கு நான் என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அவ்வாறு பேசியதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராமகிருஷ்ணன், தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் உட்பட பலரும் கண்டன அறிக்கை விடுத்துள்ளனர். கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, தமிழகத்தில் பா.ஜ.க. வுடன் முதலில் கூட்டணி அமைத்த ம.தி.மு.க., தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிபர் ராஜபக்சே ஆட்சியில் எப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் செய்யப்பட்டன என்ற கோபத்தில் கருத்துகள் தெரிவிக்கப்படுகிற போது, தமிழக பா.ஜ.க. வில் உள்ளவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களே பிரதமரிடம் அதுபற்றி எடுத்து தெரிவிக்க வேண்டுமே தவிர, மாறாக தாங்கள் தான் பிரதமருக்கு நேரடி பிரதிநிதி என்பதைப் போலக் கருதிக் கொண்டு, கடுமையான வார்த்தை பிரகடனம் செய்வது நல்லதல்ல என்பதை இனியாவது புரிந்து கொண்டு, பிரதமரின் செயலுக்கு தமிழகத்திலே எப்படிப்பட்ட எதிர்ப்பு இந்த ஒரு விஷயத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடமே தெரிவித்து, மேலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் அந்தக் கட்சிக்கே நலன் பயக்குமே தவிர, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சியின் தலைமையிலே நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் நன்மை பயக்காது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலே கூட, மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்ட போது, அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு. கழகம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும் கேட்காத நிலையில் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Comments