குழந்தை தொழிலாளர் முறை ஒழியும் வரை ஓயமாட்டேன் : கைலாஷ் சத்யாத்ரி

தினமலர் செய்தி : ஓஸ்லோ : நோபல் பரிசு என்பது ஒரு துவக்கம் தான்; என் பணியில் அது முற்றுப்புள்ளி அல்ல. குழந்தை தொழிலாளர் முறை ஒழியும் வரை நான் ஓயமாட்டேன் என்று, அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யாத்ரி கூறி உள்ளார்.

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசினை பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காக போராடிய மலாலாவுடன் பகிர்ந்து கொள்ளும் கைலாஷ் சத்யாத்ரி, மலாலா தனது மகள் போன்றவர் என தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தை தொழிலாளர் முறை ஒழியும் வரை என் பணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நார்வேயின் ஓஸ்லோ நகரில், இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

நோபல் கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய கைலாஷ் சத்யாத்ரி, இது போன்றதொரு சிறப்பான வரவேற்பை நான் இதுவரை கண்டதில்லை. குறிப்பாக குழந்தைகளும், ஆசிரியர்களும் என்னை பார்க்க காத்திருக்கிறார்கள். மலாலா, கற்பனைக்கு எட்டாத தைரியமான குழந்தை. அவருடன் இந்த கவுரவம் மிக்க அமைதிக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவர் எனது மகள் போன்றவர். இந்த பரிசினை குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கிறேன். நோபல் பரிசு என்பது எனது வாழ்க்கையின் முதல் பகுதி தான். முற்றுப்புள்ளி அல்ல. குழந்தை தொழிலாளர்களே இல்லாத நிலை ஏற்படும் வரை நான் ஓயமாட்டேன். எனது பணியை மேம்படுத்த இந்த நோபல் பரிசு நிச்சயம் உதவும் என்றார்.

சத்யாத்ரியை தொடர்ந்து பேசிய மலாலா, நான் ஐரோப்பாவில் எனது படிப்பை முடித்த பிறகு பாகிஸ்தான் செல்வேன். பாகிஸ்தான் அரசியலில் நுழைந்து, நிச்சயம் ஒருநாள் பாகிஸ்தான் பிரதமராவேன். நான் எனது நாட்டிற்காக பணியாற்ற விரும்புகிறேன். எனது நாடு வளர்ச்சி பெற்ற நாடாக வர வேண்டும் என்பதே எனது கனவு. அதற்கு எங்கள் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி அறிவு பெற வேண்டும். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தான் எனக்கு முன்மாதிரி. தற்போது கிடைத்துள்ள இந்த நோபல் பரிசு எனக்கு அதிக நம்பிக்கையையும், பலத்தையும் அளித்துள்ளது. ஏராளமானோர் என் பக்கம் இருப்பதால் மிகவும் பலமாக இருப்பதாக உணர்கிறேன். கடவுளுக்கும் எனது மனசாட்சிக்கும் பதில் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். எனது மக்களுக்கு உதவுவது எனது கடமையாக நினைக்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய மலாலா, இந்த விருது வழங்கும் விழாவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரதமர்கள் கலந்து கொள்ளாதது தனக்கு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், கருத்தால் கொள்கைகளால் வேறுபட்ட இருநாடுகளைச் சேர்ந்த இருவர் இணைந்து இந்த அமைதிக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொள்வதுடன், கல்விக்காக இணைந்து போராடுவது பெருமை அளிக்கிறது என நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் குழந்தைகளின் கல்விக்காக போராடிய 17 வயது சிறுமி மலாலாவும், குழந்தை தொழிலாளர்களை மீட்டு கல்வி அளித்து வரும் இந்தியாவின் சத்யாத்ரியும் பகிர்ந்து கொள்ள உள்ள நோபல் பரிசிற்கான பணம் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குழந்தைகளின் நலனுக்காகவும், கல்விக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments