ஊட்டி குளிரு அம்மாடி., என பாட வேண்டாம்; டிசம்பர் பனிகாலத்தில் சாரல் மழை இதம்

தினமலர் செய்தி : ஊட்டி ; ஊட்டியில் 'வெள்ளை கம்பளம் போர்த்திய' கடும் பனியுடன், குளிர் நிலவும் என்ற எதிர்பார்ப்புடன் வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியமே மிஞ்சியது.

தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த மக்கள் சுற்றுலா திட்டமிட்டால், அதில் முதல் 'சாய்ஸ்' ஊட்டி தான்.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கோடை, மழை, பனி காலங்களை வைத்து, தங்களின் சுற்றுலா திட்டங்களை வகுப்பது வழக்கம். அதில், அதிகபட்சமாக, கோடை காலம் நிலவும் மார்ச் முதல் மே மாதம் வரையிலான மாதங்களில், அதிக பட்சமாக 9 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் பருவமழை காலம் இருப்பதால், ஒரளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்திருக்கும். ஆனால், வார இறுதி விடுமுறை நாட்களில், கர்நாடக, கேரள சுற்றுலா பயணிகள், 'ஐடி' ஊழியர்களின் கூட்டம் அதிகளவில் வருவது வழக்கம்.


இதனை தொடரும், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் முதல் வாரம் வரையில், இரண்டாம் சீசன் நிலவுவதால், அந்த காலகட்டங்களில், வட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையுடன், அவ்வப்போது நீர்பனி தென்படும் இந்த காலநிலை தனித்துவமானது. இந்த 'மிஸ்டி' கிளைமெட்டில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள முக்கிய காட்சி முனைகளான தொட்பெட்டா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், கோடநாடு ஆகிய காட்சிமுனைகளுக்கு சென்றால், 'மழை மேகத்துக்குள்' நாம் 'மிதப்பதை' போன்ற உணர்வு ஏற்படும்.
'பொக்கிஷமான' ஊட்டி : டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரையில் தொடரும் பனிகாலத்தில், பகலில் கடும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலையில் கடும் குளிருமான காலநிலை நிலவும். இந்த காலகட்டங்களில், அதிகாலை கேமராவுடன் சென்றால், புல்வெளிகளில் வெண் கம்பளம் போர்த்தியதை போல காணப்படும் பனியின் மீது, காணப்படும் சூரிய ஒளி கதிர்கள், புகைப்பட அனுபவமில்லாதவர்களை கூட, 'ஒளி ஓவியராக' மாற்றிவிடும். இத்தகைய மாறுபட்ட காலநிலைகளின் 'பொக்கிஷமான' ஊட்டியில், கடந்த சில ஆண்டுகளாக தொடரும் இயற்கை மாறுபாடுகளின் காரணமாக, வெப்பநிலைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இது டிசம்பர் மாதமா...? : உதாரணமாக, டிசம்பர் மாதங்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், 'ஊட்டி குளிரு அம்மாடி...போர்வையும் வாங்க வில்லை' என்ற, பாட்டை நினைவு கொள்ள தவற மாட்டார்கள். அந்த அளவுக்கு குளிர் வாட்டும். ஆனால், தற்போதை டிசம்பர் மாதத்தில் துவக்கத்திலேயே ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு, பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. இது டிசம்பர் மாதமா...? அல்லது ஜூன் மாதத்தின் 'மான்சூன்' நாட்களின் துவக்கமா...? என்ற கேள்விகள் எழுந்தன. பெரும்பாலான சுற்றுலா பயணிகளில் சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா மையங்களில் வலம் வந்தனர். உள்ளூர் மக்களும் கூட இந்த காலநிலையை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.

மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் தேனி உட்பட தென் மாவட்டங்களை சார்ந்த சில சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'எங்கள் பகுதிகளில் தற்போது பனிகாலம் நிலவி வருகிறது; காலையில் குளிர் வாட்டுகிறது. ஊட்டியில் இன்னும் கடுமையாக இருக்கும் என, நினைத்த எங்களுக்கு, இங்குள்ள சாரல் மழையுடன் கூடி காலநிலை மிகவும் வியப்பை அளித்து வருகிறது. வங்க கடல் புயல் சின்னம் காரணமாக, இங்கு மழை பெய்தாலும், இந்த ரம்மியமான சூழல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது' என்றனர்.

இத்தகைய மாற்றங்களுக்கு, 'வெப்பசலனம், இயற்கை வளங்கள் அழிவு, சுனாமிக்கு பிந்தைய மாற்றம்' என்ற விஞ்ஞான காரணங்களை கூறினாலும், நாம் எதை கொடுக்கிறோமே... அதை தானே இயற்கை நமக்கும் கொடுக்கும் ...

Comments