'ஆப் பாயில்' சாப்பிடாதீங்க; 'ஆம்லெட்' சாப்பிடுங்க! அலாரம் அடிக்கிறார் கலெக்டர்

தினமலர் செய்தி : திருச்சி: நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை சாப்பிடலாம், பச்சை முட்டை மற்றும் 'ஆப் பாயில்' சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்,'' என, திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சியில், கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில், பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பேசியதாவது: பறவைக் காய்ச்சல், ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவும் நோய். இந்நோய், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. கேரள மாநிலத்தை தாக்கியுள்ள இந்நோய், பிற மாநிலங்களிலும் பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசு மூலம், பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்நோய், கோழி, வாத்து, வான்கோழி மற்றும் இதர பறவை இனங்களை தாக்கி, இறப்பை ஏற்படுத்தும். பறவைகள் மூலம், மனிதர்களுக்கும் இந்நோய் பரவும். தமிழகத்தில், தற்போது நோய் பாதிப்பு இல்லை. இருப்பினும், கேரளாவை தாக்கிய பறவைக் காய்ச்சல் நோய், இங்கு பரவாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை வழக்கம் போல சாப்பிடலாம். ஆனால், பச்சை முட்டை மற்றும் 'ஆப் பாயில்' சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முழுமையாக வேக வைத்த முட்டையையோ, பொரித்த, 'ஆம்லெட்'டையோ சாப்பிடலாம். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

Comments