காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறது ஐ.நா.,: உதவி செய்ய தயார் என்கிறார் பான் கீ மூன்

தினமலர் செய்தி : நியூயார்க்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியமில்லை' என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், ''இந்தியா பாக்., நாடுகள் கேட்டு கொண்டால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உதவ தயார்,'' என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


'ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட வேண்டிய அவசியமில்லை' என, இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன், இந்த விவகாரத்திற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:ஜம்மு காஷ்மீர் பிரச்னையில், இந்தியா பாக்., நாடுகளிடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் கவலை அளிக்கிறது. சமீபத்தில், அங்கு நடந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாடுகளும் கேட்டு கொண்டால், இது தொடர்பாக உதவ, ஐ.நா., தயாராகவுள்ளது. நின்று போன பேச்சுவார்த்தையை, இரு நாடுகளும் மீண்டும் துவங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

*ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு வெளியுறவு செயலர்களுக்கு இடையே சமீபத்தில் பேச்சு நடக்கவிருந்தது.
*எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.
*சமீபத்தில், ஐ.நா., பொதுச் சபையில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசும்போது, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.
*அந்த கூட்டத்திலேயே, இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐ.நா., பொதுச் சபையில் பேச வேண்டிய விஷயமல்ல' என்றார்.
*பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், 'ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.நா., உதவ வேண்டும்' என, பான் கீ மூனுக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாகவே, பான் கீ மூன், இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ளார்.

Comments